திருமணம் என்ற உறவுமுறை இந்திய கலாசாரத்தில் புனிதமான ஒன்றாக பலராலும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திருமணத்தின் புனிதத்தன்மை நீர்த்துப் போக கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது மத்திய அரசு.
திருமணத்திற்கு மீறி உறவு வைத்துக்கொள்ளும் ஆண்கள் தண்டனைக்குரியவர்கள் என்கிறது இந்திய தண்டனை சட்டம் 497 மற்றும் அதற்கு தொடர்புடைய குற்ற சட்டப்பிரிவு 198(2).
சட்டப்படி திருமணமான ஆண், வேறொரு திருமணமான பெண்ணுடன் உறவு வைத்து கொண்டால் தவறு. இதில் ஆணுக்கு 5 வருடங்கள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம். ஆனால், சம்மந்தப்பட்ட பெண் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்படமாட்டார்.
இந்த குறிப்பிட்ட சட்டப்பிரிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது, ஒருதலைபட்சமானது, பாலின சமநிலைக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தவறான உறவு வைத்துக் கொள்ளும் ஆண்களை தண்டிக்கும் இச்சட்டம், அதற்கு உடந்தையாக இருக்கும் பெண்களை இதில் சேர்க்கவில்லை என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. பிரிட்டன் போன்ற பல நாடுகளில் இந்த பிரிவு ரத்து செய்யப்பட்டது என்றும், இந்தியாவில் மட்டும் இது நடைமுறையில் உள்ளதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதற்கு, “தவறான உறவை குற்றமாக கருதும் இந்த சட்டத்தை நீர்த்துப் போக செய்தால் திருமணத்தின் புனிதத்தன்மை பாதிக்கும்” என உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது மத்திய அரசு.
பலவீனமான பெண்கள்
இது போன்ற வழக்குகளில் பெண்களையும் குற்றவாளியாக சேர்க்கும் சூழ்நிலை இன்று இல்லை என்று கூறுகிறார் பேசிய குடும்பலநல வழக்கறிஞர் ஆதிலஷ்மி லோகமூர்த்தி.
தர்மப்படி, சட்டப்படி பெண்களையும் இதில் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்றாலும், இன்னமும் இந்த சமுதாயத்தில் பெண்கள் பலவீனமானவர்களாகதான் பார்க்கப்படுகிறார்கள் என்கிறார் அவர்.
சமூக மற்றும் பொருளாதார அந்தஸ்தில் பெண்களுக்கு சமமான நிலை இன்றும் இல்லை.
குடும்ப வன்முறை சட்டத்தில்கூட பெண்கள்தான் புகார் அளிக்க முடியும். ஆண்களுக்கு என தனி பாதுகாப்பு சட்டமில்லை. ஆண்களை விட பலவீனமானவர்களாகதான் பெண்கள் இன்றும் பார்க்கப்படுகிறார்கள் என்றும் வழக்கறிஞர் ஆதிலஷ்மி குறிப்பிடுகிறார்.
“உதாரணமாக, தன் ஆண் நண்பரையும், தன் மனைவியையும் அறையில் அடைத்து, தன் மனைவி தவறான உறவு வைத்துள்ளார் என்று ஒரு ஆணால் நிரூபிக்க முடியும்” என்று கூறும் அவர், பெண்களை குற்றவாளியாக சேர்க்கக் கூடாது என்று மத்திய அரசு கூறியுள்ளது ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான் என்கிறார்.
ஆனால், முன் காலத்தில் ஆண்கள் மட்டும்தான் தவறான உறவு வைத்திருந்தார்கள் என்று இல்லாமல் தற்போது பெண்களும் இதில் ஈடுபவதை நம்மால் பார்க்க முடிகிறது என்கிறார் வழக்கறிஞர் ஆதிலட்சுமி.
தவறான உறவில் ஈடுபடும் பெரும்பாலான பெண்கள், இதற்கு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். மேலும், எந்த மாதிரியான உறவாக இருந்தாலும், இதில் பாதிக்கப்படுவது என்னவோ பெண்கள்தான்.
இன்று இருக்கும் சூழ்நிலையை பார்க்கும்போது, 497 சட்டப்பிரிவை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று ஆதிலஷ்மி கூறுகிறார்.
ஆனால், ‘திருமணத்தின் புனிதத்தன்மை போய்விடும்’ என மத்திய அரசு கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறுகிறார்.
பாலின சமநிலை
நாணயத்தின் மற்றொரு பக்கத்தை பார்த்தால், இதில் பெண்கள் தவறான உறவு வைத்துக் கொள்ளும் பட்சத்தில், ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறார் வழக்கறிஞர் அஜிதா.
பெண்களையும் இதில் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்றும், அதுவே பாலின சமநிலையை கொண்டுவரும் என்றும் அவர் கூறுகிறார்.
ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன் இருந்த காலம் எல்லாம் இந்த சமூகத்தில் இருந்துள்ளது. இந்து திருமண சட்டம் வந்த பிறகுதான் இது கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
ஆண்கள் யாருடன் வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் ஒரு பெண் இருந்தால் அது கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறார் என்று கணவர்கள் கொலை செய்யும் சம்பவங்களை கூட நம்மால் பார்க்க முடிகிறது என்கிறார் அவர்.
சட்டப்படி ஆணுக்கு எப்படி தண்டனையளிக்கப்படுகிறதோ, அதே போலதான் பெண்ணுக்கும் இருக்க வேண்டும்.
ஒரு பெண் தவறு செய்தால் தண்டனை என்று இருந்தால்தான் திருமணத்தின் புனிதத்தன்மை பாதுகாக்கப்படும் என்கிறார் அவர்.