கணவன் இன்றி எப்படி 11 மாதக் கைக்குழந்தையுடன் வாழ்க்கையை கொண்டு செல்வதென்பது தெரியாமல் தவிப்பதாகவும், தனது கணவனை தன்னோடு சேர்த்து வைக்குமாறு அண்மையில் அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட திலீபனின் மனைவி கார்த்திகா கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
புகலிடம் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், அவுஸ்திரேலியாவில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 30 வயதான இலங்கை தமிழரான திலீபன் ஞானேஸ்வரன் நாடுகடத்தப்பட்டார்.
எனினும், அவரது மனைவி மற்றும் 11 மாத கைக்குழந்தை ஆகியோருக்கு தொடர்ந்தும் அங்கு வாழ்வதற்கு ஏதுவாக Safe Haven Enterprise விசா கடந்த வாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திலீபன் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார்.
இந்நிலையில், அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள திலீபனின் மனைவி கார்த்திகா, “எனக்கும், குழந்தைக்கும் ஒரு பாதுகாப்பு தேவையாக இருக்கின்றது. அத்துடன், பிள்ளையின் எதிர்காலத்திற்கு அப்பா தேவை. என்னுடைய பிள்ளை ஏங்கித்தவித்துகொண்டிருக்கின்றாள்.
அப்பா இல்லாமல் பிள்ளை மிகவும் தவிக்கின்றாள். அவரை பிரிந்திருப்பது எனக்கும் மிகவும் கஷ்டமாக இருக்கின்றது. நான் அவரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகவே திருமணம் செய்துகொண்டேன்.
அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் வரையில் அவரோடு பேசக்கிடைத்தது. எனினும், இலங்கைக்கு நாடு கடத்திய பின்னர் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.
இந்நிலையில், தனது கணவனை தன்னோடு சேர்த்து வைக்குமாறு அவர் அனைத்து தரப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.