முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசியல் கட்சிகள் பலவற்றை இணைத்து ஒன்றிணைந்த பொதுஜன பெரமுன கட்சியொன்றினை உருவாக்கவுள்ளதாக, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்துள்ளார்
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பில் கருத்து தெரிவிக்காமல் இருக்க பொதுவான தீர்மானத்திற்கு வந்துள்ளோம். மஹிந்த ராஜபக்ஷவே இறுதி முடிவை அறிவிக்கும் வரை இதுகுறித்து பேசுவதை நாங்கள் தவிர்த்துக் கொண்டுள்ளோம்.
நாங்கள் கட்சிகள் சிலவற்றை ஓன்று திரட்டி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைப்பதன் மூலம் ஒன்றிணைந்த பொதுஜன பெரமுன கட்சியொன்றினை உருவாக்க முடியும். இதற்கு நிச்சயமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தலைவராக செயற்படுவார்.
தினேஷ் குணவர்தன பிரதி தலைவராக இருப்பார். பஷில் ராஜபக்ஷவுக்கு முக்கிய பதிவு வழங்கபடும். இதேவேளை கோட்டாபய ராஜபக்ஷவும் எம்முடன் இணைந்தால் அவருக்கும் முக்கிய பதவி வழங்கப்படும். இந்த வேலைத்திட்டம் இன்னமும் ஓரு மாதமளவில் முன்னெடுக்கப்படும்” என கூறினார்.