இலங்கை பூராகவும் விஸ்தரிக்கப்பட்டு வரும் சுவசரிய எனும் இலவச அம்புலன்ஸ் சேவை இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
சுவசரிய சேவையை வட மாகாணத்திற்கு விஸ்தரிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி இன்று யாழ்ப்பாண மாநகர சபை திடலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் இணைந்து கொள்வார்.
அவசர நிலைமைகளில் நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிக்க வழிவகுக்கும் இலவச சுவசரிய அம்புலன்ஸ் சேவை இந்தியாவின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சேவை மேற்கு, தெற்கு மாகாணங்களில் அமுலில் உள்ளது. இதனை நாடு முழுவதும் விஸ்தரிக்க இந்திய அரசாங்கம் ஒன்றரை கோடி ரூபாவுக்கு மேலான தொகையை வழங்கியது.
இதனை அடுத்தடுத்து ஊவா, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, கிழக்கு மாகாணங்களில் தொடங்கி அடுத்தாண்டுக்குள் நாடு முழுவதும் விஸ்தரிப்பது அரசாங்தக்தின் நோக்கமாகும்.
தொலைபேசி அழைப்பை மேற்கொள்வதன் சுவசரிய அம்புலன்ஸ் சேவையை இலவசமா பெற முடியும். இந்த சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் தொடக்கம் 83 ஆயிரத்திற்கு மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த சேவையை பெறுவதற்காக அழைக்க வேண்டிய இலக்கம் 1990 என்பதாகும்.
வட மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு வழங்குவதற்காக 50 அம்புலன்ஸ் வண்டிகள் யாழ்ப்பாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.