மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் இருந்தமையினால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.சட்ட மருத்துவ அதிகாரி டி.சமிந்த ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.
மன்னர் நகர நுழைவாயிலில், சதொச கட்டடப் பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து அந்தப் பகுதியில், கடந்த மே மாதம் தொடக்கம் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்போது, இதுவரை 40 வரையான எலும்புக்கூடுகள், கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.எனினும், இந்தப் புதைகுழியில் 50 இற்கும் மேற்பட்டவர்களின் எலும்புக்கூடுகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளில், குறைந்தபட்சம் மூன்று சிறுவர்களுடையது என்று சட்ட மருத்துவ அதிகாரி கலாநிதி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இவர்களின் மண்டையோடுகள் பால் பற்களுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.முன்னதாக, 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் எலும்புகளும் இருப்பதாக, தொல்பொருள் அகழ்வாராச்சியாளர் ராஜ் சோமதேவாவும் கூறியிருந்தார்.
அதேவேளை, இந்த புதைகுழியில் சடலங்கள் முறைப்படியாக அடக்கம் செய்யப்படவில்லை என்பதையும் விசாரணையாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
பெரும்பாலான சடலங்கள், ஒன்றின் மீது ஒன்று போடப்பட்டு- புதைக்கப்பட்டிருப்பதாக மன்னார் மாவட்ட சட்ட மருத்துவ அதிகாரி கலாநிதி சமிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
இந்த புதைகுழியில் உள்ள கடைசி எலும்பு எச்சம் வரை அகழ்வு செய்வதற்கு நிதி போதாது என்றும் இதனால் இந்த விசாரணைகள் நிறுத்தப்படக் கூடிய அச்சம் இருப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார்<