கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் விடுத்த கோரிக்கையை ஏற்று நிதியமைச்சர் மங்கள சமவீரவினால் வரவு செலவுத் திட்டத்தில் கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 250 மில்லியன் ரூபாவையும் பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் நிதியையும் கொண்டே மன்னார் மாவட்டத்தின் தற்போதைய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
மன்னார் நகரில் நவீன சந்தைத் தொகுதியுடன் கூடிய புதிய பஸ் நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று வெள்ளிக்கிழமை மன்னாரில் நடைபெற்ற போது அதிதிகளில் ஒருவராக கலந்துகொண்ட அமைச்சர் சம்பிக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக நிதியமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் றிஷாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ன, பிரதியமைச்சர் காதர் மஸ்தான், சார்ல்ஸ் நிர்மலநாதன் எம்.பி, மாகாணசபை உறுப்பினர்களான அலிகான் சரீப், டெனீஸ்வரன், சிராய் மூவா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் உட்பட பிரதேச சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் எனப் பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர்.
மேலும் இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியதாவது, மன்னார் பிரதேசமென்பது பின்தங்கிய பிரதேசமாக கூறப்பட்டாலும் கூட இலங்கை வரலாற்றில் ஒரு வர்த்தக கேந்திர நிலையமாக இருந்ததை நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன். இந்தியாவின் கேரள மாநிலத்தின் கொச்சின் துறைமுகமும் மாதோட்டத் துறைமுகமும் ஒரே இணைப்பில் சந்திக்கும் துறையாகக் காணப்பட்டது.வரலாற்று ஆய்வாளர் லெனால்ட்வூல்ப் என்பவர் இந்தப் பிரதேசங்களில் வந்து ஆராய்ச்சி நடத்திய போது 4000 பேர் முத்துக் குளித்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த முத்துக்கள் வெளிநாடுகளின் அரச இராஜதானிகளில் இன்றும் அலங்கரிக்கப்பட்டுள்ளமை நமக்கு மகிழ்ச்சி தருகின்றது. பிரித்தானியரின் காலத்தில் தான் நமது முத்துக்கள் அரிதாகின. அவ்வாறான முத்து வளத்தை விட மேலும் இரண்டு வஸ்துகள் இங்கு மறைந்து காணப்படுகின்றன. 2011 செப்டம்பர்,மன்னாரில் இருந்து 32 கிலோ மீட்டர் கடல் மைல் தொலைவில் எரிபொருளையும் எரிவாயுவையும் கண்டுபிடித்தோம். பேசாலை பகுதியில் அவை இருப்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யுத்தம் நிறைவடைந்த பின்னர்,அமைச்சர் றிஷாட் பதியுதீனுடன் இணைந்து மின்சக்தி அமைச்சராக நான் இருந்த வேளை இந்தப் பிரதேசத்துக்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி என்பவற்றை நாம் எவ்வாறு கொண்டு வந்தோம் என்று உங்களுக்குத் தெரியும். அதே போன்று இந்த பிரதேசத்தில் செயலிழந்து கிடந்த மின்சாரத்தை வழமைக்கு கொண்டு வர நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.அது மாத்திரமன்றி இந்த நாட்டுக்கே மின்சாரம் வழங்கக்கூடிய காற்றலை மின்சாரத்தை பெறக்கூடிய இடம் மன்னார் மாவட்டமே.
இவ்விரு வளங்களையும் நாம் விருத்தி செய்தால் துபாய் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தைவிட வளம் கொழிக்கும் இடமாக இந்தப் பிரதேசத்தை மாற்ற முடியும்.மன்னார் நகரத்தை மாத்திரமல்ல மன்னார் மாவட்டத்திலுள்ள 5 பிரதேச சபைகளில் உள்ள நகரை அபிவிருத்தி செய்வதற்காக மேம்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபை முறையான அறிக்கைகளை தயாரித்துள்ளது. அத்துடன் சிலாவத்துறை மற்றும்பேசாலை நகரத்தை நிர்மாணிக்கும் திட்டத்தையும் வகுத்துள்ளோம்.
அது மாத்திரமன்றி அல்பதா விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகளோடு மின்சாரத்தை எடுக்கவும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். பள்ளிமுனை விளையாட்டு மைதானத்தையும் புனரமைத்து கையளிக்கவுள்ளோம். இந்த நாட்டில் தற்போதைய ஜனாதிபதியைக் கொண்டு வருவதற்கும் நல்லாட்சியைக் கொண்டு வருவதற்கும் நாங்கள் அளித்த பங்களிப்பை இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். நான் உட்பட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் மற்றும் ஒரு சில அரசியல் முக்கியஸ்தர்களினால் மேற்கொண்ட முயற்சிகளினாலேயே புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டதென்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்