கல்வித்துறைசார் சில தொழிற்சங்கங்கள் இணைந்து நாளைய தினம் முன்னெடுக்க தீர்மானித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை, அரசியல் நோக்கத்தின் அடிப்படையிலானதாகும் என தேசிய கல்விச் சேவைகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அதன் தலைவரான இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும், அரசாங்கம் தொடர்ச்சியாக கல்வித்துறைசார் பிரமுகர்களின் எதிர்ப்புக்களை கருத்திற்கொள்ளாமல், அரசியல் பழிவாங்கலின் அடிப்படையில் நியமனங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக கல்வியை பாதுகாப்பதற்கான தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் மற்றும் ஒழுக்காற்று குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய ஆயிரத்து 14 பேருக்கு அரசியல் பழிவாங்கல் அடிப்படையில் கல்வித் துறையில் உயர்மட்ட நியமனங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள தயாராவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே நாளைய தினம் எதிர்ப்பு போராட்டத்துடன், தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன் காரணமாக தற்போது பாடசாலைகளில் இடம்பெறும் பரீட்சைகளுக்கு பாதிப்பு ஏற்படும்.
அதனால், அவற்றை பிற்போட நேரிடலாம்.
எனவே, இவை அனைத்திற்குமான பொறுப்பை தற்போதைய கல்வி அமைச்சரும், அரச சேவை ஆணைக்குழுவினருமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எவ்வாறிருப்பினும், நேற்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டிருந்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், குறித்த தொழிற்சங்க நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் மீதும் அன்பு செலுத்துபவர்கள், பெற்றோர்கள் மீது மரியாதை கொண்டவர்கள், பரீட்சைகள் இடம்பெறும் காலங்களில் தொழிற்சங்க நடவடிக்கை ஊடாக பாடசாலை நடவடிக்கைகளை முடக்க மாட்டார்கள்.
இதுபோன்ற சூழ்ச்சிகளின் பின்னணியில் இருக்கின்றவர்கள் யாவர் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
இது தொழிற்சங்க நடவடிக்கை அல்ல.
குறுகிய அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் முன்னெடுக்க தீர்மானித்துள்ள இந்த தொழிற்சங்க நடவடிக்கை மூலம், பாடசாலை மாணவர்களின் வாழ்க்கை ஊடாக அரசாங்கத்தை கவிழ்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.