உடனடியாக ஏதாவது ஒரு வழக்கைத் தாக்கல் செய்தாவது, சிறையிலுள்ள இந்த இளைஞர்களுக்கு பிணை வழங்கியாவது சிறையிலிருந்து விடுதலையாகி சமூகத்தில் செயற்படுவதற்கு வசதிகளை செய்து கொடுக்குமாறு நாம் இந்த நாட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தேஞான சார தேரர் வேண்டுகோள் விடுத்தார்.
திகன இனவாத சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு தற்பொழுது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் சுகதுக்கங்களை விசாரிப்பதற்கு நேற்று (24) தேரர் உட்பட ஒரு குழுவினர் போகப்பரைச் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர். இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இதனைக் கூறினார்.
கண்டி திகன சம்பவத்தில் சில பிள்ளைகள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிலருடைய வயது 16 -17 இற்கு இடைப்பட்டதாக காணப்படுகின்றது. இதில், அடுத்த மாதம் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் சிறிய பௌத்த பிக்குவும் இருக்கின்றார்.
17 கிலோமீட்டருக்குள் ஒரு பிரச்சினை நடைபெறும் போது இந்த நாட்டின் பாதுகாப்புப் பிரிவினர்தான் அதன் பொறுப்பை ஏற்க வேண்டும். இந்தப் பிரச்சினையை உருவாக்கியவர்கள் யார் என்பது தொடர்பில் இதுவரையில் எந்தவித முடிவுகளும் வெளிவரவில்லை.
காலியில், அளுத்கமையில், அம்பாறையில், கம்பளையில் அதனையடுத்து திகனயில் சம்பவங்கள் இடம்பெற்றன. துரதிஷ்டம் என்னவென்றால், இறுதியில் இந்த நாட்டின் நிருவாகிகள் ஒவ்வொரு காரணத்தை உருவாக்கி தமது மானத்தை மறைத்துக் கொள்வதற்காக நடவடிக்கை எடுப்பதாகவும் தேரர் குற்றம்சாட்டினார்.