வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தினர் கடந்த 6,7 மற்றும் 8ம் திகதிகளில் மத்திய மாகாணத்திற்கு மேற்கொண்ட சுற்றுலா பயணத்திற்கு 2 லட்சத்து 10 ஆயிரத்து 829 ரூபா 76 சதம் செலவு ஏற்பட்டுள்ளது என்று முதலமைச்சரின் அமைச்சு தெரிவிக்கின்றது.
வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் ஏற்பாட்டில் கடந்த 6,7 மற்றும் 8ம் திகதிகளில் மத்திய மாகாணத்திற்கு ஓர் சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது குறித்த துறையில் வடக கு மாகாணத்தில் 11 பணியாளர்கள் மட்டுமே பணியாற்றும் நிலையில் 40பேர் சுற்றுலா சென்றமை தொடர்பில் குறித்த அமைச்சிடம் கேட்கப்பட்ட வினாவிற்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு பதிலளிக்கப்பட்டுள்ளது.
குறித்த பயணத்தில் வட மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் உத்தியோகத்தர்களும் வடக்கு மாகாண முதலதைச்சரது அமைச்சின் உத்தியோகத்தர்களுமாக 40பேர் இதில் பங்கு பற்றியிருந்தனர். குறித்த பயணத்திற்கு சுற்றுலாத்துறை அபிவிருத்தியில் அமைச்சிற்கு பி.எஸ்.டி.ஜி நிதியின் கீழ் அறுபது மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு ஒதுக்கிய நிதியில் பிற மாகாணங்களிற்கான அனுபவ பகிர்விற்கான கள பயணத்திற்கு ஒரு மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டு நிதி ஆணைக்குழு மற்றும் மாகாண திட்டமிடல் குழுவினாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் வடமாகாண சுற்றுலாப் பணியகமானது 2018-06-07 அன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் கடந்த 2018-06-14ம் திகதி இடம்பெற்ற முதலாவது முகாமைத்துவ சபைக்கூட்டத்தில் சுற்றுலாத் துறையில் விருத்தியடைந்துள்ள ஏனைய மாகாணங்கள் எவ்வாறான கட்டமைப்புக்களை கொண்டு செயலாற்றுகின்றன என்பது தொடர்பிலும் அனுபவ பகிர்வு மூலம் அறிவைப் பெற்றுக்கொள்ள களப் பயணம் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.