பிரதான செய்தி:யாழ்ப்பாணம் செம்மணியில் மீட்கப்பட்ட எழும்புக்கூடு எச்சங்களை அடையாளம் காண முடியாத நிலமையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
செம்மணி பகுதியில் நீர்த்தாங்கி அமைப்பதற்காக நிலத்தினை அகழ்ந்த போது , கடந்த வெள்ளிக்கிழமை மனித எழும்புக்கூடு எச்சங்கள் மீட்கபட்டன.
அதனை தொடர்ந்து கிராம சேவையாளர் ஊடாக பொலிசாருக்கு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதை, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து யாழ்.நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கையிட்டனர்.
அதன் பிரகாரம் கடந்த சனிக்கிழமை சம்பவ இடத்திற்கு சென்ற யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் சி. சதிஸ்தரன் விசாரணைகளை மேற்கொண்டதுடன் , அகழ்வினை மேற்கொண்டு ஆய்வுகளை முன்னெடுக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்று காலை எழும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிகளில் சட்ட வைத்திய அதிகாரி, வைத்திய அதிகாரியின் குழுவினர்கள், தடயவியல் பொலிஸார் ஆகியோர் இணைந்து அகழ்வு பணிகளில் ஈடுபட்டனர். அதன் போது நில மட்டத்தில் இருந்து 75 சென்ரி மீற்றர் (இரண்டரை அடி ) ஆழத்தில் எழும்புக்கூடு எச்சங்கள் மீட்கப்பட்டன.
மண்டையோட்டின் பின் பகுதி , கால் மூட்டின் சில பகுதிகள் என சொற்ப அளவிலான எழும்புக்கூட்டு எச்சங்களே மீட்கப்பட்டன. இடுப்பு பகுதி , தாடை பகுதி. முள்ளந்தண்டு பகுதிகள் , உள்ளிட்ட பெருமளவான பகுதிகள் மீட்கப்படவில்லை.
இதனால் மீட்கபட்ட எழும்பு கூட்டு எச்சங்கள் ஆணினதா ? பெண்ணினதா ? என்பதனை கூட உடனடியாக அறிய முடியாத நிலை காணப்படுகின்றது.
ஏனைய எழும்புகூட்டு எச்சங்கள் முன்னதாக அகழ்ந்து செல்லப்பட்ட மண்ணுடன் சென்று இருக்கலாம். அல்லது உக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
மீட்கபட்ட எழும்பு கூடு எச்சங்கள் பாதுகாக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டன. அவை மருத்துவ ஆய்வுகளுக்கு உட்படுத்திய பின்னரே மேலதிக தகவல்களை தெரிவிக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.