சிங்களம் நன்றாகப் பேசத்தெரிந்த பதினான்கு கரும்புலிகள் தாக்குதல் திட்டத்துக்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டம்மான் ஆகியோரால் உள்வாங்கப்படுகின்றனர்.
அணியின் தாக்குதல் திட்டமிடல் தளபதியாக சார்ள்ஸ் என்ற போராளி நியமிக்கப்படுகிறார். தாக்குதலுக்கான பயிற்சிகளும் ஒத்திகைகளும் நிறைவடைந்து காட்டுவழியாக கொழும்பில் ஊடுருவிவிடுகின்றனர். அங்கே சிங்களக் கிரிகெட் அணி வீரர்கள் போல் வேடமிட்டு ரோசா ரக மினி பஸ்ஸில் நகரை வலம்வருகின்றனர்.
தம்முள் உரையாடும்போதுகூட முழுக்க முழுக்க சிங்களத்தில் பேசிக்கொண்டதாலும் சிங்களப் பாட்டுக்களையே போட்டு ரசித்துக்கொண்டிருந்ததாலும் யாருக்கும் இவர்கள்மீது துளியளவுகூட சந்தேகம் ஏற்படவில்லை. விளையாட்டுக்கென்று கொண்டுசென்ற உபகரணங்களுக்குள் பகுதி பகுதியாக கழற்றி சூனியமாக மறைத்துவைக்கப்பட்ட வெடிபொருட்களையும் சுடுகலன்களையும் யாரும் காணமுடியவில்லை. முழுக்க முழுக்க சிங்கள விளையாட்டு வீரர்கள் போலவே காட்சியளித்தனர்.
ராஜா பெர்ணான்டோ மைதானத்தில் மாலையில் விளையாடிவிட்டு இரவுப் பொழுது பூங்கா ஒன்றைச் சென்றடைந்து சிங்களக் குத்துப் பாடல்களைப் போட்டு அதற்கேற்ப ஆடிக்கொண்டே திட்டங்களை வகுக்கின்றனர்.
அங்கு தம்மைச் சந்தேகத்தோடு சிலர் நோட்டமிட்டதால் மெதுவாக அங்கிருந்து நீங்கி வேறிடம் செல்கின்றனர். இரவு 9:45 மணிக்கு நகரின் மின்சாரத்தை துண்டித்து இருள்மயமாக்கிவிட்டு மறைத்து வைக்கப்பட்ட வெடிபொருட்களைப் பொருத்துகின்றனர். பின்னிரவின் நிலா வெளிச்சத்தில் கட்டுநாயக்க வான்படைத்தளத்தை நோக்கி பதுங்கிப் பதுங்கி நகர்கின்றது அந்த அணி.
மின்சாரத்துண்டிப்பு நகரைப் பரபரப்பாக்கிவிட்டது. பொலிஸார் குவிக்கப்பட்டு வாகனங்கள் சோதிக்கப்படுகின்றன. எல்லோரும் உறக்கத்திற்குச் சென்றபின் மயான அமைதி நிலவுகின்றது. சரியாக அதிகாலை 3.30 மணிக்கு வான்படையின் பின் தளத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலாவது ரொக்கெட் லோஞ்சர் தாக்குதலோடு விமான அழித்தொழிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகின்றன.
கைக் குண்டுகளையும் ரொக்கெட் லோஞ்சர்களையும் கொண்டு விமானங்கள் தாக்கப்படுகின்றன. மறுபுறத்தில் விமானப்படையினரோடு பலத்த துப்பாக்கிச் சண்டை நடக்கின்றது. கட்டுநாயக்க அதிர்ந்துகொண்டிருக்கிறது.
முதலில் விமானப்படை விமானங்களைத் தாக்கி அழித்துவிட்டு அடுத்ததாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலயத்தில் போக்குவரத்து விமானங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது. காலை எட்டுமணிவரை இறுதிப் போராளி இறக்கும்வரை சண்டை தொடர்கிறது.
பேரதிர்ச்சியைக் கொடுத்த இத் தாக்குதலில் பயணிகள் விமானங்கள், கிபிர் விமானங்கள், மிக் அதிவேக போர் விமானங்கள், பயற்சி விமானங்கள், பல்வகை உலங்கு வானூர்திகள் என பல வானூர்திகள் தாக்கி அழிக்கப்படுகின்றன.
அப்போதைய பெறுமதியின்படி பதினொராயிரம் கோடி இழப்பினை அரசாங்கம் சந்தித்து வரலாற்றில் மாபெரும் பொருளாதார நட்டத்தைக் காண்கிறது. வரவு செலவுத்திட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு தேவையான முப்படைக்கு ஒதுக்கவேண்டிய நிதி ஒரே நாளின் ஒருசில மணித்தியாலங்களில் காவுகொள்ளப்படுகின்றது.
விடுதலைப் புலிகளுடன் அவசரமாக யுத்த நிறுத்தத்தைச் செய்தே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை சந்திரிகா அரசுக்கு ஏற்படுத்திக்கொடுத்த தாக்குதல் இதுவெனலாம். ஆண்டுத்தொடக்கத்தில் படையினர் நன்கு திட்டமிட்டு ஆனையிறவை மீளக் கைப்பற்றுவதற்காக பெருமெடுப்பில் மேற்கொண்ட தீச்சுவாலை நடவடிக்கை புலிகளால் முறியடிக்கப்பட்டு பாரிய உயிரிழப்புக்களைச் சந்தித்ததனால் யுத்த நிறுத்தத்திற்கான அழைப்பை சந்திரிகா புலிகளிடம் கோருகிறார்.
ஆனால் இலங்கையில் தம்மீது சுமத்தப்பட்டிருக்கும் பயங்கரவாதத் தடையை அரசாங்கம் நீக்கவேண்டும் இல்லையேல் யுத்த நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என புலிகள் அந்தக் கோரிக்கையை நிராகரித்தனர். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்கு படிப்படியாக உயர்ந்துவருவதனால் அது தனது ஆட்சிக்கு குந்தகமாக அமைந்துவிடும் என்பதனால் புலிகளின் கோரிக்கையை சந்திரிகா அரசு நிராகரித்தது. அதன் பின்னர்தான் இந்த பாரிய அதிரடித் தாக்குதல் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பேரிடியைக் கொடுக்கக்கூடியவாறு புலிகளால் மேற்கொள்ளப்படுகிறது.
வேறு வழியின்றி புலிகள் மீதான பயங்கரவாதத்தடை முதன்முதலாக நீக்கப்படுவதற்கு அரசாங்கம் ஒப்புக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம். புலிகள் மீதான இந்த தடை நீக்கம் 2006 ஆம் ஆண்டு யுத்தம் ஆரம்பித்ததும் மீண்டும் மஹிந்த அரசாங்கத்தால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இன்றுவரை எழுபதுகளில் ஏற்படுத்திக்கொண்ட நாட்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் இலங்கையில் புலிகள் மீதான தடை தொடர்கிறது.
அரசாங்கமும் புலிகளும் ஒரே நேரத்தில் விளிம்பில் நின்று போர் நிறுத்தத்தைக் கேரிய முதல் சந்தர்ப்பம் இதுதான். அதாவது ஒரு யுத்த நிறுத்தம் அரசாங்கத்துக்கு எவ்வளவுதூரம் தேவைப்பட்டதோ அதேயளவு தூரம் புலிகளுக்கும் ஏற்பட்டது. தம்மால் மேற்கொள்ளப்பட்ட ஜெயசிக்குறு நடவடிக்கையிலும் பாரிய இழப்பினைச் சந்தித்து புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஓயாத அலைகள் நடவடிக்கைகளிலும் பாரிய இழப்புக்களைச் சந்தித்த இலங்கைப் பாதுகாப்புத்துறையை மீட்டெடுக்கவேண்டிய அவசரத்தேவை அரசுக்கு இருந்தது.
இப்படியே போனால் யாழ் மாவட்டத்தையும் புலிகளிடம் முழுதாக இழந்து தமிழீழ உருவாக்கத்துக்கு வழிவகுத்துவிடுமோ என்று நாடாளுமன்றில் அங்கம்வகித்த UNP உட்பட்ட எதிர்க்கட்சிகளின் அழுத்தமும் அரசாங்கத்தை வலிந்த யுத்தநிறுத்தக் கோரிக்கைக்கு தள்ளியது.
மறுபுறத்தில் தொடர்ச்சியாக கண்ட வெற்றித் தாக்குதல்களில் வரலாறு காணாத படைத் தளபாடங்களைக் கைப்பற்றி ஆயுத பலத்தை புலிகள் பெற்றிருந்தாலும் ஆள் பலம் மிகப்பெரிய குறைபாடாக இருந்தது. வடக்கிலும் கிழக்கிலும் புலிகள் அகலக் கால் பதித்ததனால் மேற்கொண்டு யுத்தத்தை நடத்துவதற்கு ஆளணி போதவில்லை.
கிழக்கு தளபதியாக இருந்த கருணா கிழக்கிலே கட்டாயமாக ஆட்சேர்ப்புச்செய்த போராளிகளைக் கொண்டு வடபோர்முனையை நிலைப்படுத்த முடிந்ததேதவிர நிலையெடுக்க முடியவில்லை. தமிழரின் சனத்தொகைப் பெருக்கமுள்ள யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினாலேயே படைபலத்தைப் பெருக்க முடியும். ஆனால் யாழ்ப்பாணத்தைப் போரிட்டுக் கைப்பற்ற இரண்டு பிரதான காரணங்கள் தடையாக விளங்கின.
ஒன்று, படையினரோடு போரிடுவதற்கு “யாழ் செல்லும் படையணி” என புதிய படையணியொன்றைக் கட்டமைத்தாலும் பெருகி நிற்கும் படையினரை எதிர்கொண்டு அகலக்கால் பதிப்பதற்கு போதிய ஆளணி புலிகளிடம் இல்லை. இன்னொன்று குறைந்த போராளிகளைக்கொண்டு அகலக்கால் பதிக்க சாதகமான புவியியல் நிலைமைகளைக் குடாநாடு கொண்டிருக்கவில்லை.
ஆக அரசாங்கத்துக்கு உடனடியாக புனரமைக்கவேண்டிய ஆயுதப் பற்றாக்குறையும், புலிகளுக்கு உடனடியாகப் புனரமைக்கவேண்டிய ஆளணிப் பற்றாக்குறையும் ஏற்பட்டு ஒத்த தருணத்தில் போர் நிறுத்தம் ஒன்றிற்கு இணங்கவேண்டிய கட்டாயத்தை இரு தரப்பிற்கும் ஏற்படுத்தியது.
இந்த நிர்ப்பந்தத்தைக் கொடுத்ததுதான் கட்டுநாயக்க தாக்குதல். ஜூலைக் கலவரத்துக்கு பழி தீர்ப்பதற்காக புலிகள் மேற்கொண்ட மிகப்பிரிய பொருளாதார அழிப்பு எனப் பார்த்தாலும் அரசாங்கத்தை வலிந்து தம்மீது போடப்பட்டிருக்கும் பயங்கரவாதப் போர்வையை எடுக்க வைப்பதற்கான தீர்க்க தரிசனத் தாக்குதலாகவே தலைவர் பிரபாகரனாலும் பொட்டம்மானாலும் நன்கு திட்டமிட்டு வழிநடத்தப்பட்டது இது.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகு புலிகள் பற்றிய இறுக்கமான முடிவினை எடுப்பதற்கும் இந்த தாக்குதல் சர்வதேசத்திற்கு பாரிய பேரதிர்ச்சியைக் கொடுத்ததும் இங்கே கோடிட்டுச் சொல்லவேண்டியதாகும்.