செவ்வாய் கிரகத்தில் நீர் இருக்கலாம் என ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது அங்கு பரந்து விரிந்த ஏரி இருக்க வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்கா அனுப்பிய கியூரியோசிட்டி என்ற விண்கலம், அங்கு ஏரிப்படுகை போன்ற அமைப்பு இருந்ததாக முன்னர் கண்டறிந்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட மார்சிஸ் என்ற ரேடர் கருவியின் மூலம் அங்கு ஏரி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவில் நீர் இருப்பதற்கான முதல் ஆதாரம் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
செவ்வாயின் துருவ பனி முகடுகள் உள்ள கிழக்குப்பகுதியில், 20 கிலோமீட்டர் பரப்பளவுக்கு இந்த ஏரி பரந்து விரிந்திருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இந்தநிலையில், முதல் முறையாக தொடர்ந்து தண்ணீர் பாய்வதற்கான ஆதாரம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
தண்ணீரின் அடுக்கு எவ்வளவு ஆழத்திற்கு இருக்கும் என்பதை ஆராய்ந்து அறிய முடியவில்லை.
எனினும் குறைந்தது ஒரு மீட்டர் ஆழம் வரையில் நீர் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில், மனிதர்கள் அங்கு வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.