இயற்கை மருத்துவத்தின் மீதுள்ள ஆர்வத்தால் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் வீட்டிலேயே குழந்தை பெற்றெடுத்த தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழந்த சம்பவத்தையடுத்து தற்போது அவரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூரை அடுத்துள்ள புதுப்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார் கார்த்திகேயன். இவரின் மனைவி கிருத்திகா. இவர் அதே பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இத்தம்பதிக்கு ஏற்கெனவே 4 வயதில் பெண் குழந்தையொன்று உள்ளது. இந்நிலையில், கார்த்திகா மீண்டும் கர்ப்பமடைந்தார். பொதுவாகவே கார்த்திகேயன் – கிருத்திகா தம்பதியர் ஆங்கில மருத்துவத்தைவிட, இயற்கை மருத்துவத்தில் அதிக ஆர்வம் மிக்கவர்கள் என்பதால், இந்தமுறை தங்களது குழந்தை வீட்டிலேயே இயற்கையான முறையில் பிறக்க வேண்டும் என ஆசைப்பட்டனர்.
அதற்காக ஏற்கெனவே வீட்டில் குழந்தை பெற்ற அனுபவமுள்ள பிரவீன் – லாவண்யா ஆகிய கார்த்திகேயனின் நண்பர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.
இந்நிலையில்,கிருத்திகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஏற்கெனவே திட்டமிட்டபடி வீட்டிலேயே யூடியூப்பைப் பார்த்து அவருக்கு பிரசவமும் நடைபெற்றது. அதில் கிருத்திகாவுக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்ததையடுத்து நஞ்சுக்கொடி வெளியே வராமல் போனதாலும், அதிக ரத்தப்போக்காலும் எதிர்பாராதவிதமாக கிருத்திகா உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை உண்டாக்கியது. அதைத்தொடர்ந்து திருப்பூர் சுகாதாரத்துறையினர் சார்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டது. கிருத்திகாவின் கணவரான கார்த்திகேயன் மற்றும் அவரின் நண்பர்களான பிரவீன் – லாவண்யா தம்பதி ஆகியோர் மீது திருப்பூர் ஊரக காவல்துறையினர் பிரிவு வழக்கு பதிவு செய்தது.
அதனையடுத்து கணவர் கார்த்திகேயன் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும், அவரின் நண்பர்களான பிரவீன் – லாவண்யா தம்பதியரிடமும் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் பொலிஸார்.