நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏசுமந்திரனுக்கும் ஜயம்பதி விக்ரமரத்னவுக்கும், புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான நோக்கம் எதுவும் கிடையாதென்றுச் சுட்டிக்காட்டுகின்ற அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர்கொண்ட அணி, புதிய அரசமைப்பை வைத்துக்கொண்டு, இவர்கள் இருவரும், பிரதமர் ரணிலி விக்கிரமசிங்கவிடம் இருந்தும் அரச சார்ப்பற்ற நிறுவனங்களிடம் இருந்தும் பணம் சம்பாதிக்க முயற்சிக்கின்றனர் எனவும் குற்றஞ்சுமத்தியது.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பதவிவிலக்க முடியுமெனவும் தெரிவிக்கும் அவ்வணி, சிங்கள மொழியிலுள்ள அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தில், பிரதமரைப் பதவி விலக்குவதற்கான அதிகாரம், ஜனாதிபதியிடம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டுகின்றது.
அதனால், அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி, பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கவேண்டுமென, அவ்வணி வலியுறுத்துகின்றது.
கொழும்பு – புஞ்சி பொரளையிலுள்ள சுதந்திர ஊடகக் கேந்திர நிலையத்தில், நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவ்வணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, அரசமைப்பு வழிநடத்தல் குழு உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஜயம்பதி விக்கிரமரத்ன ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது தனிப்பட்ட அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக, புதிய அரசமைப்புக்கான நிபுணர் குழுவின் இணக்கமின்றி, புதிய அரசமைப்பைத் தயாரிக்கின்றனர் எனக் குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பில், சுமந்திரன் எம்.பியிடம் கேட்பதற்காக சில கேள்விகள் உள்ளதாகக் குறிப்பிட்ட டிலான் எம்.பி, அக்கேள்விகளைத் தான், அடுத்த ஊடகச் சந்திப்பின்போது முன்வைப்பதாகவும் குறிப்பிட்டார்.