கிரிக்கட் வீரர்கள் எதிர்காலத்தில் அரசியலுக்கு பிரவேசிப்பது சிறந்தது என இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான் போன்ற விளையாட்டு வீரர் பாகிஸ்தானின் பிரதமராக முடியுமானால், சிறந்த விடயங்களைச் செயற்படுத்துவதற்காக விளையாட்டு வீரர்கள் அரசியலுக்கு வரவேண்டும். விளையாட்டில் ஈடுபட்டமையானது அரசியலில் ஈடுபட தமக்கு பெரும் பலமாக அமைந்தது என அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதேநேரம், குமார் சங்கக்கார அரசியலுக்கு பொருத்தமானவரா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர், அது குறித்து தம்மால் கூற முடியாது என்றும், மக்களே அதனைத் தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.