பெண் தலைமைத்துவக் குடும்பமொன்றின் வாழ்வாதாரமாக இருந்த 11 ஆடுகள் விசமிகளால் குத்திப் கொல்லப்பட்டுள்ளன. சம்பவம் நேற்று மாலை முல்லைத்தீவு, விசுவமடுவில் இடம்பெற்றுள்ளது.
48 வதுடைய தர்மசீலன் சுமதி என்ற குடும்ப பெண்ணின் வாழ்வாதாரத்துக்காக ஆடுகள் வழங்கப்பட்டிருந்தன. 8 ஆடுகளும் மூன்று குட்டிகளும் இருந்தன. அவற்றை கண்ணும் கருத்துமாக அன்போடு பார்த்து வந்தார் சுமதி.
தனது வீட்டுக் காணியின் பின்பக்கம் ஆடுகளை மேய்ச்சலுக்காக கட்டுவது அவரது வழமை. நேற்றும் அவ்வாறே கட்டிவிட்டார்.
மாலையில் சென்று பார்த்தபோது அனைத்து ஆடுகளும் குத்திக் கொல்லப்பட்டிருந்தன.‘‘ஆடுகள் அனைத்தும் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு செய்வதறியாது துடித்துப் போனேன்’’ என்றார் சுமதி. அவரது வீட்டுக்கு அருகில் ஒரு படை முகாம் இருக்கும் நிலையிலும் இந்தக் கொடூரம் நிகழ்ந்துள்ளது.
கிளிநொச்சியில் பெண் ஒருவரின் வாழ்வாதாரத்துக்காக வழங்கப்பட்ட மாடு அண்மையில் இறைச்சிக்காக வெட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று 11 ஆடுகள் குத்திக் கொல்லப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று உயிரிழந்த ஆடுகளைப் பார்வியிட்டுவிட்டு சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.