உலகின் மிக உயர்ந்த மலை சிகரமான எவரெஸ்ட், ஆப்ரிக்காவின் உயர்ந்த மலை சிகரமான கிளிமாஞ்சாரோவில் மூன்று நாட்களில் ஏறி, இந்தியாவைச் சேர்ந்த 17 வயது மாணவி சிவாங்கி பதக் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஹரியாணா மாநிலம் ஹிசார் நகரைச் சேர்ந்த மாணவி சிவாங்கி பதக் (17 வயது). மலையேறும் பயிற்சியில் தீவிர ஆர்வம் கொண்ட அவர், சிறு வயது முதலே அதற்காக அவர் பயற்சி எடுத்து வந்துள்ளார்.
உலகின் மிக உயர்ந்த மலை சிகரமான எவரெஸ்டில் ஏற திட்டமிட்டார். அதன்படி மூன்று நாட்களில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து அவர் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் குறைந்த வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் இந்திய இளம் என்ற சாதனை படைத்தார்.
இதனைத் தொடர்ந்து, ஆப்ரிக்காவில் உள்ள உயர்ந்த மலை சிகரமான கிளிமாஞ்சாரோவில் ஏறியுள்ளார் ஆப்ரிக்காவின் உயர்ந்த சிகரமான கிளிமாஞ்சாரோ, 5,895 மீட்டர் உயரம் கொண்டது. ஜூலை 21-ம் தேதி இந்த சிகரத்தை ஏறத் தொடங்கி சிவாங்கி, மூன்று நாட்களில் ஜூலை 24-ம் தேதி அன்று மலை சிகரத்தை அடைந்தார்.சிவாங்கியின் முயற்சி உலக சாதனை பட்டியலில் விரைவில் இடம் பெறவுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘சிறு வயது முதலே ஏதேனும் சாதனை செய்ய வேண்டும் என்ற வேட்கை எனக்கு உண்டு. எனது பயிற்சிக்கு பெற்றோர் ஆதரவு தெரிவித்தபோதிலும், மலையேற்றம் ஆபத்து மிக்கது என்பதால் சற்று பயந்தனர்.
எனினும் அவர்களுக்கு தைரியம் சொல்லி எனது பயற்சியை தொடர்ந்தேன். எனது உறவினர்கள், சக தோழர்களும் எனக்கு உற்சாகம் ஊட்டினர். இதனால் இந்த சாதனையை என்னால் செய்ய முடிந்தது’’ எனக் கூறினார்.சாதனை செய்துள்ள மாணவி சிவாங்கி பதக்குக்கு, பிரதமர் மோடியும் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.