மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்குவது தொடர்பாக அரசாங்கம் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என நீதி அமைச்சர் தலதா அதுக்கோரள தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் வழக்குகள் தொடர்பாக மீண்டும் பரிசீலனை செய்து தெளிவுபடுத்தும் செயற்பாடுகளை சட்ட மா அதிபர் திணைக்களம் ஊடாக முன்னெடுக்கவுள்ளோம்.
தூக்குத் தண்டனை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்துத் தெரிவித்து இருப்பினும், இதனை நடைமுறைப்படுத்துவதற்கு பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டியுள்ளன.
அத்துடன், தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் அலுக்கோசின் பதவி குறித்தது தவறான தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இது இலங்கையில் நடைமுறையில் இருக்கின்ற ஒரு பதவிதான்.
எதிர்காலத்தில் தூக்குத் தண்டனை வழங்குவது தொடர்பான இறுதித் தீர்மானமொன்றினை அரசாங்கம் விரைவில் முன்வைக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.