இப்போதெல்லாம் வடக்கு – கிழக்கில் புதையல் தோண்டும் நடவடிக்கைகள் தனியார் தரப்பினராலும், கொள்ளைக்காரர்களாலும், ஏன் இராணுவத்தினராலும்கூட மேற்கொள்ளப்படு கின்றன.
இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதன் மூலமான கைதுகள் , புதையல் இருக்கும் இடத்தைக் கண்டறியும் அதி நவீன உபகரண பறிமுதல் உத்தரவுகள் என எல்லாமே பரபரப்புச் செய்திகளாக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.
இவற்றுக்கெல்லாம் மேலதிகமாக, இப்போது வடக்கு கிழக்கில் புதையல் தோண்டும்போது புதையல் கிடைக்கிறதோ இல்லையோ, ஆனால் மனித உடல் எச்சங்களும், எலும்புகூடுகளும் அதிக அளவில் வெளியே தலைகாட்டுகின்றன.
அண்மையில் மன்னார், கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவன வளாகத்தில் (ச.தொ.ச) கட்டட விரிவாக்கத்திற்காக நிலம் தோண்டப்பட்டபோது, மனித எலும்புக்கூடுகள் வெளிவர ஆரம்பித்தன. அது நீதித்துறைக்கு பாரப்படுத்தப்பட்டு நீதிமன்றத்தின் மேற்பார்வையில் தொடர்ந்தும் அதே இடத்தில் அகழ்வுப் பணிகள் இடம் பெற்று வருகின்றன. இன்னும் மனித உடல் எச்சங்கள் வெளிவருவது நின்றபாடாகத் தெரியவில்லை.
பகுப்பாய்வுக்காக அனுப்பப்படவுள்ள மன்னார் புதைகுழி எச்சங்கள்
கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டுவரும் அகழ்வுப் பணிகளின் போது, பல மனித எலும்புக்கூடுகள் தென்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இந்தக் கட்டுரை எழுதப்பட்டவேளை வரை, மன்னார் நீதிமன்றத்தில் 52 பெட்டகங்களில் மனித உடல் எச்சங்கள் பாதுகாக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.இது சர்வசாதாரணமாகக் கருதிக் கைவிட்டுக் கடந்து போகக்கூடியதொரு விடயமுமல்ல.
இந்த உடல் எச்சங்கள் பகுப்பாய்வுக்காக கொழும்பு பலகலைக்கழகத்துக்கு அனுப்பப்பட இருக்கின்றன. அந்தப் பகுப்பாய்வு முடிவுகள் கிடைத்ததன் பின்னரே இந்த எலும்புக்கூடுகள் பற்றிய மர்ம முடிச்சுக்கள் அவிழும்.
குறித்தமனித உடல் எச்சங்களை ஆய்வுசெய்வதன்மூலம் அவற்றின் வயது , அவை புதைக்கப்பட்ட காலம், நிகழ்ந்த சம்பவம், இறந்த அல்லது கொல்லப்பட்ட காரணங்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வரும். சில நேரங்களில் இந்த எச்சங்கள் குறித்த விவரங்கள் வெளிச்சத்துக்கு வராது தடுக்கப்படவும் கூடும். பகுப்பாய்வு அறிக்கை வெளிவர முன்னரே, அந்த எச்சங்கள் சம்பந்தமாக என்ன நிகழ்ந்திருக்க லாம் என அலசி ஆராய்வதே இந்தக்கட்டுரையின் நோக்கமாகும்.
மன்னார் எனப்படுவது வடக்கின் தமிழர் தாயகப் பரப்பாகும்.இந்த மாவட்டமும், கடந்த போர் இடம்பெற்ற காலத்தில் பல வடுக்களையும், நேரடி, மறைமுக போர்களுக்கு முகம் கொடுத்த பகுதியாகும். எனவே அதன் விளைவுகளின் அறுவடையாகக் கூட இந்த மனித உடல் எச்சங்கள் அமையலாம்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்று 500 நாள்களையும் கடந்து சென்று கொண்டிருக்கும் சமாந்தர காலப்பகுதியில், இந்த மனிதப் புதைகுழி எச்சங்கள் வெளிவந்திருப்பது, காலத்தின் தன்னாக்க வெளிப்படுத்துகையோ அல்லது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்ணீருக்கான நீதியின் விடையாகவோ கூட அமையலாம்.
போர் இடம்பெற்ற காலத்தில் பல தமிழ் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருந்திருக்கிறார்கள், போர் முடிவடைந்த காலப்பகுதியில்கூட, பலர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்று காணாமல் ஆக்கப்படோரைக் கண்டறியும் ஆணைக்குழு கூடத் தகவல் வெளியிட்டிருக்கிறது, அத்தோடு காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்களில் கலந்துகொள்கின்ற உறவினர்களினால் காண்பிக்கப்படுகின்ற ஒளிப்படங்கள் கூட ஏராளமானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டதுக்கு சான்றாக அல்லது சிறந்த மாதிரியொன்றாக (சாம்பிளாக) அமைகிறது. இந்த அகழ்வுப் பணியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடுகள் அதற்கான விடைகளை அல்லது அது யாராக இருக்கும் என்ற விடையை மரபணுச் சோதனைகள் மூலம் தந்துவிடலாம்.
இரு மனித எலும்புக்கூடுகள் ஒன்றையொன்று பற்றிப் பிடித்த நிலையில்…
அத்தோடு மட்டுமல்லாது, கடைசியாக மன்னார் அகழ்வின் போது ஒரு குழிக்குள் இரு மனித எலும்புக்கூடுகள் ஒன்றை ஒன்று பற்றிப் பிடித்த நிலையில் தோற்றமளித்ததாக ஒளிப்பட ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த எலும்புக்கூட்டை நிதானமாக ஆழமாக அவதானித்தால் அதிலும் ஏதோ ஒரு விடயம் புலப்பட்டு வெளிப்படுகிறது., அந்த எலும்புக்கூட்டின் தலைப்பகுதி ஏதோ ஒன்றை வெளியுலக்குக்குச் சொல்ல எத்தனிக்கிறது போலிருக்கிறது.
அந்த எலும்புக்கூட்டை உற்றுப்பார்க்கும்போது, தலைப்பகுதியானது ஒரு கோணத்தினூடாக பார்த்து குரலெடுத்துக் கதறுவது போல தோற்றமளிக்கிறது. அதுவும் அது இன்னொருவரோடு இணைக்கப்பட்டும் காணப்படுகிறது,
மன்னார் புதைகுழி விவகாரத்தில் வெளியாகும் பலதரப்பட்ட ஊகங்கள்
இதன் மர்மம் என்னவென வெளிப்படுத்தப்பட்டே ஆக வேண்டும், ஒருவேளை துன்புறுத்தப்பட்டு கதறிய நிலையில் கொலை செய்யப்பட்டிருக்கலாம், அல்லது பலர் கைகள் கயிறுகளால் பிணைக்கப்பட்டு கூட்டாகக் கொல்லப்பட்டிருக்கக்கூட வாய்ப்பிருக்கலாம், அல்லது குற்றுயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம், என ஊகங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இது மனிதப் படுகொலையின் உச்ச விளிம்பு நிகழ்வுகளாகக்கூட அமைந்திருக்கலாம். அல்லது அவற்றின் பகுப்பாய்வு முடிவுகள் அண்மைய காலச் சம்பவமாக அல்லாது 200 முதல் 500 வரையான வருடங்களுக்கு முற்பட்டதாகக் கூட இருக்கலாம் என்பதும் வியப்புக்கு உரியதொன்றல்ல.
ஏனெனில், இலங்கை தீவு அந்நியர்களான போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என்போர் ஆளுகைக்கு உள்ளாகியிருந்தபோது கரையோரப் பிரதேசங்களே அந்த அன்னியர்களது முதலாளுகைக்கும், இராச்சிய நடவடிக்கைகளுக்கும் உள்ளாகியிருந்தமை வரலாற்றுப் பதிவுகள்.
மன்னார் பகுதியானது, இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களையும் கோட்டைகளையும் கொண்டிருந்தது, இந்த ஆளுகை போராட்ட சூழல்களில் கைதிகள், புரட்சி செய்தோர், படையெடுப்புக்களில் கொல்லப்பட்டோர், குற்றச் செயல்களுக்காக கொல்லப்பட்டோர் இவ்வாறு புதைக்கப்ப ட்டுமிருக்கலாம். அவற்றின் எச்சங்களாகக்கூட இவை அமையலாம், இத்தகைய ஊடகங்களுக்கெல்லாம், அந்த உடல் எச்சங்களின் பகுப்பாய்வின் மூலம், எலும்புக்கூடுகள் மண்ணில் புதையுண்டிருந்த கால இடைவெளியே விடையளிக்கப் போகிறது.
இது போன்றதொரு நிகழ்வாக அண்மையில் உக்ரைன் நாட்டில் கல்லறையொன்றில் கண்டெடுக்கப்பட்ட இணைந்த நிலையான மனித எலும்புக்கூடொன்று உலகத்தின் கவனத்தைப் பெருமளவில் ஈர்த்திருந்தது.
சடலங்கள் புதைக்கப்பட்ட காலத்தை பகுப்பாய்வு முடிவுகள் உறுதிசெய்தால் பல மர்மங்களுக்கு விடை கிட்டும்
அந்த எலும்புக்கூடுகள் ஆணும் பெண்ணும் இணைந்தவாறான நிலையில் காணப்பட்டன, அது 3000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள். அதில் ஆண் எலும்புக்கூடொன்றுடன் பெண் மிக பாசமாக, இயல்பாக இருப்பது போலத் தோன்றுகிறது.
அந்த எலும்புக்கூடுகளை ஆராய்ச்சி செய்த உக்ரைன் நாட்டு தொல்லியல் ஆராய்சியாளர்களது கருத்துப்படி, எலும்புக்கூடுகள் இருக்கும் நிலையை நோக்கும்போது, கணவன் மனைவியுடைய எலும்புக்கூடுகள் என்றும், இரண்டும் இறந்த பின்னர் ஒன்றாகப் புதைக்கப்படவில்லை என்றும், அதில் சாவின் பின் இயல்பாக புதைப்பது போன்று புதைக்கப்பட வில்லை என்று தோன்றுவதாகவும், கணவன் இறந்த பின் உயிர்வாழ மனமில்லாத நிலையில் கணவன் மீது கொண்ட அன்பு காரணமாக மனைவியானவள் அடுத்த பிறவியில் தனது அந்தக் கணவனுடன் சேர்ந்து வாழலாம் என்ற எண்ணத்தில், மெல்லச் சாகடிக்கும் விசத்தை அருந்திய பின்னர் கணவனின் உடலுக்கு அருகில் படுத்து, அவரது தலைக்கு கீழாக வலது கையை வைத்து கட்டியணத்து, கணவனின் முகத்துடன் தனது முகத்தைச் சாய்த்து தனது கால்களிரண்டையும் கணவன் கால்களின் மீது போட்டு, இடது கையை அவரது மார்பு மீது வைத்தவாறு , இயல்பாக, விசத்தின் வீரியத்தால் மயக்கமடைந்து உயிர் துறந்திருக்கிறார் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்திருந்தனர்.
அந்த பெண்ணே இத்தகைய முடிவை விரும்பி மேற்கொண்டுள்ளார் என்றும், இறப்பின் பின்னர் இப்படியான இயல்பான உடல்களின் நெருக்கத்தை ஏற்படுத்திப் புதைப்பது இயலாத காரியம் என்றும் உக்ரைன் நாட்டு தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுவதோடு, குறித்த அந்தப் பெண் தனது கணவன்மீது கொண்டிருந்த பாசத்தை எண்ணித் தாம் மெய்சிலிர்ப்பதாகவும் கூறி யுள்ளனர். இந்தச்சம்பவம், உண்மைக் காதலுக்கு ஒரு சான்றாக இருப்பினும், இங்கு ஏன் இது குறித்து குறிப்பிட நேர்கிற தென்றால் , ஒரு எலும்புக்கூடு இருக்கும் நிலையை வைத்து குறித்த அந்த ஆணினதோ அல்லது பெண்ணினதோ இறப்புப் பற்றியும், இறக்கும் போதான சூழல் அமைவுகள் பற்றியும், குறித்த எலும்புக்கூட்டுக்குரிய நபரோ, பெண்மணியோ இறந்த காலம், நேரம், வயது, ஆணா அல்லது பெண்ணா அல்லது கர்ப்பவதியா, கன்னியா , என்ன இனம் , என்ன மொழி பேசினார்கள் என்பனவற்றைக் கண்டறியும் நவீன விஞ்ஞான யுகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மர்மங்கள் என்றோ ஒரு நாள் துலங்கியே ஆகும்
இதை ஏன் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளதெனில், மன்னார் புதைகுழியில் சிக்கிய எலும்புக்கூட்டின் முகபாவம் பல செய்திகளைச் சொல்கிறது, அதனுடன் இன்னொரு எலும்புக்கூடு இயல்பாக பிணைந்திருக்கிறது அல்லது பற்றிப்பிடித்திருக்கிறது, இந்நிலைகளை வைத்து முடிவுகளை நாம் எடுக்கலாம். அவை பல்வேறு வகைப்பட்ட ஊடகங்களின் முடிவில் மேற்கொள்ளப்படக்கூடும்.
ஆனால் இந்த எலும்புகூடுகள் உண்மையான பகுப்பாய்வுக்கு உட்பத்தப்படும்போது அது எந்த ஆண்டுக்குரியது? அவற்றுக்குரிய ஆண் அல்லது பெண், இறந்த ஆண்டு, இறக்கும் போது அவர்களது வயது, குண்டடி பட்டு இறந்துள்ளனரா? எலும்புகளில் உடைவுகள் உள்ளனவா? உடைவுகள், இறப்புக்கு சற்று முன் சித்திரவதையின்போது ஏற்படுத்தப்பட்டவையா? சம்பவம் எவருடைய ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றுள்ளது? அதன் மரபணுச் சோதனை மூலத்தை அறிந்தால், அவை எவருடைய, எவர்களுடைய உறவினர் அல்லது மகன் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் மரபணு மாதிரிகளுடன் ஒப்பிட்டு தீர்க்கமான விஞ்ஞான உண்மைகளின் அடிப்படையில் முடிவுகளை எட்ட முடியும்.
இத்தகையதொரு முடிவை எட்டுவதற்கு முதலில் பகுப்பாய்வு முடிவுகள் உண்மையாக இருக்க வேண்டும், உண்மையாக இருந்தாலும், அது அரசியல் அல்லது வேறு தலையீடுகள், தடைகளின்றி வெளிப்படுத்தப்பட வேண்டும்.
எனவே புதைகுழிகளில் இத்தனை காலமும் மறைந்து போயிருந்த மர்மங்கள் துலங்கும்காலம் வெகு தொலைவில் இல்லை.
ஆனால் உண்மை உறுதிப்படுத்தப்படவேண்டியிருந்தால், குறித்த மனித உடல் எச்சங்கள் குறித்த பகுப்பாய்வுகள் நேர்மையானவிதத்தில், பக்கச்சார்பற்ற வகையில், அரசியல் தலையீடுகள் எதுவுமின்றி இடம்பெற்றாக வேண்டும்.
அத்தகையதொரு நீதியும் நேர்மையுமான பகுப்பாய்வுகள் பல உண்மைகளை வெளிக்கொணரும் வகையில் அமைய இடமுண்டு.