கருவில் ஜனித்த பெண் சிசுவை அழிப்பதில் தொடங்கி மரணம் வரை பெண்களைப் பின் தொடரும் வன்முறை, வக்கிரங்களின் வகைகளைப் பட்டியலிட்டால் தீராது.
கருவில் ஜனித்த பெண் சிசுவை அழிப்பதில் தொடங்கி மரணம் வரை பெண்களைப் பின் தொடரும் வன்முறை, வக்கிரங்களின் வகைகளைப் பட்டியலிட்டால் தீராது. அதில் சமீபகாலமாக இணைந்திருக்கிறது ஸ்பை கேம் போர்ன். ஒரு பெண்ணை அவரது சம்மதம் இல்லாமலோ சம்மதத்தோடோ நிர்வாணமாகப் படம் பிடித்துவிட்டு, பிறகு அவரது சம்மதம் இல்லாமலேயே அதை வெளியில் பரப்புவதன் பெயர்தான் ஸ்பை கேம் போர்ன்.
இதை, பழிவாங்கும் போர்ன், அதாவது Revenge Porn என்றும் அழைக்கிறார்கள். இப்படியான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் அந்தப் பெண்ணுக்கு நன்கு தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என இருவகையாக உள்ளனர். துணிக் கடைகளில், தியேட்டர், பூங்கா, பொது நீச்சல் குளம் போன்றவற்றின் கழிப்பறைகளில் கேமராவை ரகசியமாக ஒளித்து வைத்து படம் பிடித்து அதைப் பரப்பும் சைக்கோக்கள் ஒருவகை. தன் காதலியாகவோ மனைவியாகவோ இருந்தபோது எடுத்த அந்தரங்கமான வீடியோக்கள், படங்களை பின்னர் அப்பெண்ணின் சம்மதம் இல்லாமலேயே பரப்புபவர்கள் இரண்டாவது வகை.
இந்தியாவைப் பொறுத்தவரை இரண்டாவது வகையான வீடியோக்கள்தான் அதிகமாகப் பரப்பப்படுகின்றன என்பதுதான் குரூரமான உண்மை. அந்தரங்கம் புனிதமானது என்பார்கள். தன்னை நம்பி வரும் ஒரு பெண்ணை அவளது விருப்பத்துடனோ விருப்பமின்றியோ வீடியோ எடுப்பதே தவறான விஷயம்தான். அதைப் பிற்பாடு வெளியில் பரப்புவது என்பது சைக்கோதனத்தின் உச்சம். இந்தியாவில் இப்படியான குற்றங்களுக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் உள்ளன.
ரிவென்ஜ் போர்ன் தொடர்பான புகார்கள் தர பாதிக்கப்பட்ட பெண்தான் செல்ல வேண்டும் என்றில்லை. அவர் சார்பாக வேறு யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். அவசியம் எனில் வழக்கை ஒரு பெண் போலீஸ் அதிகாரி விசாரிக்கவும் கோரிக்கை வைக்கலாம். இவை எல்லாம் சட்டத்தில் உள்ளன. ஆனால், நடைமுறையில் இப்படியான குற்றங்களுக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை உள்ளதா எனப் பார்த்தால் கிட்டத்தட்ட ஜீரோதான் பதில்.
இணையதளத்தின் வருகைக்குப் பின் ஆறாகப் பெருகும் பாலியல் வீடியோக்களின் வெள்ளத்தில் பாதிக்கு மேல் இப்படியான கேண்டிட் போர்ன்கள்தான். இவற்றுக்கு எதிராக மிகக் குறைந்த பெண்களே வழக்குத் தொடுக்கிறார்கள். பெண்கள் இதை தங்களுக்கு ஏற்பட்ட மானக்கேடு எனக் கருதாமல், தனக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று கருதும் நிலை இங்கு வரவேண்டும். அப்படி துணிச்சலாகப் புகார் தரும் பெண்களுக்கு இயல்பான எதிர்காலம் உத்தரவாதமாக்கப்பட வேண்டும். இந்த சமூக முதிர்ச்சி ஏற்படாத வரை எத்தனை சட்டங்கள் இருந்தாலும் இந்த அநீதி தீராது என்பதே கசப்பான உண்மை.