யாழ்ப்பாணத்தில் நேற்று மூன்று இடங்களில் வீடுகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முகங்களை மூடிமறைத்த வாறு, இலக்கத் தகடுகளை மறைத்து உந்துருளிகளில் வந்த குழுக்கள் தாக்குதல்களை சில நிமிட நேரங்களில் நடத்திச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
வாள்வெட்டுக் குழு உறுப்பினர் என தாம் சந்தேகிக்கும் ஒருவரது உறவினரின் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்தத் தாக்குதல் சம்பவங்கள் 4 உந்துருளிகளில் சென்ற 8 பேர் குழுவினால் நேற்று இரவு 7 மணிக்கும் 7.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலாளிகள் தங்கள் முகத்தை மறைத்திருந்தனர். தலைக் கவசம் மற்றும் கறுத்த மழை அங்கி அணிந்திருந்தனர்.கொக்குவில் பிரம்படி ஒழுங்கை, கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அருகிலுள்ள புதவீதி, ஆனைக்கோட்டை ஆகிய பகுதிகளிலுள்ள வீடுகளின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீட்டின் கண்ணாடிகளை அடித்து நொருக்கினர்.
வீட்டினுள் புகுந்து தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட வீட்டுத் தளபாடங்களையும் சேதமாக்கியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக முகத்தை மூடி வாள்களுடன் செல்லும் குழுக்களால் வீடுகள் தாக்கப்பட்டு வருகின்றது. வர்த்தக நிலையங்கள் தாக்கப்படுகின்றன.
வர்த்தக நிலைய உரிமையாளர்கள் அச்சுறுத்தப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்படுகின்றது. தொடர்ந்து இடம்பெறும் இந்தச் சம்பவத்தால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
வடக்கு வன்முறைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சர், பொலிஸ்மா அதிபர் யாழ்ப்பாணத்திற்கு வந்து சென்ற பின்னரும் அவை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனால் மனமுடைந்துள்ள பல குடும்பங்கள் வடக்கில் இருந்து வெளியேறும் மனநிலையில் இருப்பதாக யாழ்ப்பாண செய்திகள் தெரிவிக்கின்றன