நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பிலான 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் குறித்து நீதி அமைச்சின் அறிக்கை விரைவாக கிடைக்கப் பெற்றால், அடுத்த மூன்று மாத காலப் பகுதிக்குள் குறித்த சட்ட மூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முடியும் என பாராளுமன்ற தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தனிநபர் பிரேரணையாக மக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் கடந்த மே 25 ஆம் திகதி சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது சபாநாயகரிடமிருந்து சட்ட மா அதிபருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபரினால் அரசியலமைப்புக்கு முரணில்லை என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 9 ஆம் திகதி அச்சட்ட மூலம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது.
இந்த சட்ட மூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும் என்ற அடிப்படையில் நீதி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பின்னர் இது தொடர்பிலான அறிக்கை நீதி அமைச்சினால் தயாரிக்கப்பட வேண்டும். இதற்காக வேண்டி ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட முடியும் எனவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.