கல்விச் செலவுக்காக கேரளாவில் மீன்களை விற்ற கல்லூரி மாணவியை விமர்சித்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹனான் என்ற கல்லூரி மாணவி, தனது கல்விச் செலவுக்காக கைவினைப் பொருட்கள் மற்றும் மீன்களை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், ஹனான் கல்லூரி சீருடையில் தெருக்களில் மீன் விற்றது ஊடகங்களில் செய்தியாக வெளிவந்தது.
கல்விக்காக மாணவி ஒருவர் சுயமாக சம்பாதிப்பதை பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்த நிலையில், எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்தன.
இந்த மாணவி குறித்து தகவல் அறிந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஹனானின் தன்னம்பிக்கையை பாராட்டுவதாகவும், அவருக்கு கேரள மக்கள் துணை நிற்க வேண்டும் என்றும் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, விளம்பரத்திற்காக ஹனான் மீன் விற்பதாக தகவல்கள் பரவின. இந்நிலையில், ஹனானை சமூக வலைதளத்தில் தவறாக விமர்சித்த ஒருவரை கேரள காவல்துறையினர் கைது செய்தனர்.
திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு: இதனிடையே, ஹனான் குறித்து அறிந்த அருண் கோபி என்னும் மலையாள திரைப்பட இயக்குநர், அவர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஹனானுக்கு வாய்ப்பு அளிக்கப்போவதாக கூறியுள்ளார்.