வியட்னாமில் பேருந்தும், சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தனது திருமணத்துக்கு குடும்பத்துடன் சென்று கொண்டிருந்த மணமகன் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
ஹனோய்:
வியட்னாம் நாட்டின் காங்க் ட்ரி மாகாணத்தில் இருந்து திருமணத்துக்காக மணமகன் உட்பட குடும்பத்தினர் 17 பேர் மினி பேருந்தில் பின்ஹ் டின்ஹ் மாகாணத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த சரக்கு லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி மோசமான விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் சம்பவ இடத்திலேயெ பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மணமகன் உட்பட மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், படுகாயங்களுடன் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிறுகாயங்களுடன் தப்பிய லாரி ஓட்டுனரை கைது செய்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனது திருமண விழாவுக்கு செல்லும் வழியில் மணமகனும் அவரது குடும்பத்தாரும் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.