இடிமின்னலுடன் கூடிய மழைசாரலால் கடந்த 4 நாட்களாக லண்டன் உட்பட்ட இங்கிலாந்தின் நகரங்களில் வெப்பநிலை குறைந்திருந்தது.
ஆயினும் வடஆபிரிக்காவில் இருந்து வரும் வெப்ப அலை காரணமாக மீண்டும் இந்தவார இறுதியில் வெப்பநிலை உயரவுள்ளது. ஆனால் பிரித்தானியாவுடன் ஒப்பிடும் போது ஸ்பெயின் போர்த்துக்கல் பிரான்சின் தென்மேற்குப்பகுதி ஆகியன அதியுச்ச வெப்பநிலையை எட்டவுள்ளன. பிரான்சில் எட்டு பிராந்தியங்களில் அக்னி வெப்பநிலைக்குரிய செம்மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதனைவிட ஐரோப்பியக் கண்டத்தில் இந்த வார இறுதியில் சிலவேளைகளில் 1977 யூலை மாதத்தில் (ஏதென்சில்) பதிவு செய்யப்பட்ட 48 பாகை வெப்பநிலை பதிவு முறியடிக்கப்படக்கூடும்.
இதேவேளை பிரித்தானியாவைப் பொறுத்தவரை தென்மேற்கு இங்கிலாந்தில் நாளை மறுதினம் வியாழக்கிழமை 30 பாகை வெப்பநிலை எதிர்பார்கப்படுகிறது.
இங்கிலாந்தின் சில இடங்களில் கடந்த சில நாட்களாக பெய்தமழையால் 58 நாட்களாக நீடித்த வரட்சி நிலை முறிக்கப்பட்டமை விவசாயிகளுக்கு ஆறுதல் அளிக்கும் விடயமாக மாறியுள்ளது. எனினும் தற்போதைய வரட்சிநிலையால் எதிர்வரும் குளிர்காலத்துக்கான உணவுக்கையிருப்பில் சவால் நிலை ஏற்படக்கூடும்.