தோட்டதொழிலாளர்களின் வேதனத்தை வாழ்க்கை செலவிற்கேற்ப அதிகரிக்கபடவேண்டும் என அகில இலங்கை தோட்டதொழிலாளர்களின் சங்கத்தின் தலைவர் கிட்னன் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனம் தொடர்பில் புதிய கூட்டுஒப்பந்தத்தில் கைச்சாத்திடபடவுள்ள தொழிற்சங்கங்கள் வாழ்க்கை செலவிற்கேற்ப தோட்ட தொழிலாளர்களுக்கான வேதனத்தை பெற்றுகொடுக்கபட வேண்டுமென அகில இலங்கை தோட்ட தொழிலாளர்களின் சங்கத்தின் தலைவர் கிட்னன் செல்வராஜ் மேலும் தெரிவித்தார்.
31.07.2018 அன்று மதியம் அட்டன் நகரில் மக்களை தெளிவுப்படுத்தும் நோக்கில் “புதிய வாழ்வை நோக்கி” எனும் தொனிப்பொருளின் கீழ் பிரசுரிக்கபட்ட துண்டு பிரசுரத்தின் போதே இதனை அவர் தெரிவித்தார்
இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
எமது தோட்ட தொழிலாளர்கள் ஏனைய சமுகத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் மிகவும் மோசமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
இதற்கு காரணம் அவர்களுடைய பொருளாதாரம். ஆகவே அவர்களுடைய பொருளாதாரத்தினை மேம்படுத்தவேண்டும். விஷேடமாக அவர்களுக்கு போதுமான அளவு ஊதியம் கிடைக்காமையினால் உயர் கல்வி வரை சென்று அவர்களுடைய பிள்ளைகளுக்கு மேலும் கல்வியை தொடரமுடியாமல் உள்ளது. அதுமட்டுமல்ல மந்தபோஷனம் என்பது மலையகத்தை பொறுத்தவரையில் நூற்றுக்கு 22சதவீதம் காணப்படுகிறது.
தோட்டதொழிலாளர்களின் சுகாதாரம், வீட்டுப்பிரச்சினை, வாழ்வாதாரம் போன்றவற்றை எடுத்து கொண்டால் எமது மக்கள் மலையகம் என்ற சிறைச்சாலையில் வாழுகின்ற ஒரு நிலைமையே காணப்படுகிறது. ஆகவே எதிர்வரும் கூட்டு ஒப்பந்தத்தில் தோட்டதொழிலாளர்களுக்கு வாழ்க்கை செலவிற்கேற்ப அவர்களுக்கான சம்பளத்தினை பெற்று கொடுக்கவேண்டுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.