பூமியை ஒத்த கிரகம் என கருதப்படும் செவ்வாய்க் கோள் இன்றைய தினம் பூமிக்கு மிக அருகில் வரவுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள்.
இது 15 வருட கால இடைவெளிக்குப் பின்னர் இவ்வாறு பூமிக்கு அருகில் பயணிக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுத் தொகுதியிலுள்ள கோள்கள் அனைத்திற்கும் குறிப்பிட்டதொரு நீள்வட்டப் பாதை இருப்பது தெரிந்ததே. அதன்படி பூமியின் நீள் வட்ட பாதைக்கு வெளிப்புறமாக 6 கோள்கள் உள்ளன. அவற்றில் முதலில் உள்ளது செவ்வாய் கிரகம் ஆகும்.
கடந்த 27ஆம் திகதி முதல் செவ்வாய் கிரகத்துக்கு நேராக பூமி வரத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று பூமிக்கும், செவ்வாய்க்கும் இடையிலான தூரம் குறைகிறது. இந்த 2 கிரகங்களும் 5 கோடியே 76 இலட்சம் கிலோமீற்றர் தொலைவில் வருகின்றன. இத்தகவலை அமெரிக்காவின் நாசா விண்வெளி நிலையம் வெளியிட்டுள்ளது.
பொதுவாக செவ்வாய் கிரகம் 38 கோடி கிலோமீற்றர் தூரத்தில் சுழலும். இன்று பூமிக்கு 5 கோடியே 76 இலட்சம் கிலோமீற்றர் அருகாமையில் பயணிக்கவுள்ளது. எனவே, செவ்வாய் கிரகத்தை தொலைநோக்கி மூலம் பார்வையிட முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கிரகம் இன்று பூமியை நெருங்கும் காட்சியை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் கிரிப்த் வானிலை ஆய்வு நிலையம் நேரடியாக ஒளிபரப்பவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனைப் பார்வையிட கொழும்பு பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் இன்று இரவு 7.00 மணி முதல் 10 மணி வரை விண்ணை பரிசோதிக்க மூன்று முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதனை பல்கலைக்கழகத்தின் பாரிய அளவிலான தொலைநோக்கு கருவிகளைப் பயன்படுத்தி பார்வையிடமுடியும். இச் செவ்வாய்க் கிரகத்தை தொலைநோக்கி மூலம் பார்வையிடவுள்ள பொதுமக்கள் கொழும்பு பல்கலைக்கழக விளையாட்டுத் திடலுக்கு வருகை தரவேண்டும் என பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சிப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.
பொலன்னறுவை விஜித மத்திய மகாவித்தியாலயத்தில் மற்றுமொரு விண்ணை பார்வையிடும் முகாம் நாளை (1) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இதற்கு முன்பு 2003-ம் ஆண்டு 5 கோடியே 57 இலட்சம் கிலோமீற்றர் தூரத்தில் பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம் வந்தமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய நிகழ்வை அடுத்ததாக 2020ஆம் ஆண்டிலேயே பார்வையிடக் கூடியதாக இருக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.