யாழ் வண்ணார்பண்ணை வடகிழக்கு கிராம அலுவலரை தாக்கியமை மற்றும் கொக்குவிலில் 3 வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுக்களை சிசிரிவி காணொலிப் பதிவின் ஊடாக நிரூபிக்க முடியும் என யாழ்ப்பாணம் காவற்துறையினர் வழங்கிய உறுதிமொழியையடுத்து அவர்களை எதிர்வரும் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.
கொக்குவில் பிரம்படி லேன், புது வீதி ஆகிய இடங்களிலுள்ள 2 வீடுகளுக்கு புகுந்து அடாவடியில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற நிலையில் நேற்று திங்கட்கிழமை சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
அத்துடன், வண்ணார்பண்ணை வடகிழக்கு (ஜே 100) கிராம அலுவலகரை அவரது அலுவலகத்துக்குள் புகுந்து மிரட்டியமை – அவரது அலுவலக பொருள்களை அடித்துச் சேதப்படுத்தியமை மற்றும் கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அண்மையிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து வானுக்கு தீவைத்து அடாவடியில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் ஒருவர் நேற்றிரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை (30.07.18) நண்பகல் இடம்பெற்றது.
நான்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இருவேறு வழக்குகளின் கீழ் சந்தேகநபர்கள் இருவரும், யாழ்ப்பாணம் நீதிமன்றில் மேலதிக நீதிவான் வி.இராமகமலன் முன்னிலையில் இன்று முற்படுத்தப்பட்டனர்.
“கொக்குவிலில் ஆவா குழு உறுப்பினர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து சந்தேகநபர்களில் ஒருவர் அடாவடியில் ஈடுபட்டுள்ளார். வீடுகளுக்குள் புகுந்து வன்முறைகளில் ஈடுபட்ட 3 சம்பவங்களும் இரண்டு குழுக்களுக்கிடையிலானவை” என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.
சந்தேகநபர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியுமா? என்று மன்று கேள்வி எழுப்பியது. “சம்பவ இடங்களுக்கு அண்மையிலுள்ள சிசிரிவி கமராக்களின் காணொலிப் பதிவுகள் பெறப்பட்டுள்ளன.
அவற்றில் சந்தேகநபர்கள் உள்ளனர். அதனடிப்படையிலேயே இருவரும் கைது செய்யப்பட்டனர்” என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.
சிசிரிவி கமரா பதிவை வரும் வெள்ளிக்கிழமை மன்றில் முன்வைக்க உத்தரவிட்ட மேலதிக நீதிவான், அன்றுவரை சந்தேகநபர்களின் விளக்கமறியலில் வைத்து வழக்கை ஒத்திவைத்தார்.