கனடா செய்திகள்:கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் அந்நாட்டு குடியுரிமை பெற்ற இலங்கை தமிழர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த சம்பவம் ஹமில்டன் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனைவி மற்றும் ஆறு மாத கைக்குழந்தையுடன் ரட்னசிங்கம் என்பவர் தனது காரில் பயணம் செய்துகொண்டிருந்த போது கார் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
காரின் இயந்திரப் பகுதியில் இருந்து சிறிதாக புகை வெளியேறியமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கார் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் வாங்கப்பட்ட குறித்த காரில் ஏற்பட்டிருந்த இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளதுடன், பாதுகாப்பு கருதியே குறித்த காரை வாங்கியதாகவும் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த கார் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இந்த விபத்தில் யாருக்கும் காயம் மற்றும் பாதிப்பு ஏற்படாமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
மேலும், இது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்னர் இடம்பெறவில்லை என குறித்த கார் தயாரிப்பு நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.