மட்டக்களப்பு மாவட்டத்தில் துவிச்சக்கர வண்டிகளில் செல்வோரை இரவு வேளைகளில் விபத்துகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் விசேட செயற்றிட்டம் ஒன்று, பொலிஸ் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் பிரிவில், இந்த ஆண்டில் விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும் இவற்றில் வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்றோர் இருவர் இரவு வேளைகளில் விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதுபோன்ற விபத்துகளில் 60ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இதனடிப்படையில் துவிச்சக்கர வண்டியில் செல்வோர் மின் விளக்கு பொருத்த வேண்டும், பின் பகுதியில் ஒளி தெறிப்பு ஸ்டிக்கர் ஒட்டவேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. இருப்பினும் அவை கவனத்தில் கொள்ளப்படாத நிலையில் அவற்றினை பொருத்துவதற்கான நடவடிக்கையினை மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகம் மேற்கொண்டது.
அந்தவகையில் நேற்று முன்தினம் இரவு பொலிஸார் வீதிகளில் செல்லும் துவிச்சக்கர வண்களில் மின்குமிழ்கள் பொருத்தப்படாத துவிச்சக்கர வண்டிகளை கைப்பற்றி அவற்றிற்கு டைனமைட் மின்குமிழ் மற்றும் பின் பகுதியில் ஒளி தெறிப்பு ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் நடைபெற்ற போது மட்டக்களப்பு பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.டி.சந்திரபால உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கைப்பற்றப்பட்ட 75ற்கும் மேற்பட்ட துவிச்சக்கர வண்டிகளுக்கு டைனமைட் மின்குமிழ் மற்றும் பின் பகுதியில் ஒளி தெறிப்பு ஸ்டிக்கர்கள் பொருத்தப்பட்டது.
மேலும் இந்த நடவடிக்கையானது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.