வரலாற்று முக்கியத்துவம் மிக்க யாழ்ப்பாணக் கோட்டை இராணுவத்திற்கு சொந்தமானது என்று தெரிவித்துள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி, கோட்டைப் பகுதியில் இராணுவம் தொடர்ந்தும் முகாமிட்டிருக்கும் என்றும் திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றார்.
யாழ் கோட்டையில் இராணுவ முகாமொன்றை அமைப்பதற்கு தமிழர் தரப்பால் தொடர்ச்சியாக கடும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில் இன்றைய (01.08.2016) தினம் யாழ் கோட்டைக்கு விஜயம்செய்திருந்த நிலையிலேயே சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க இந்த அறிவிப்புக்களை விடுத்திருக்கின்றார்.
வடக்கில் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ள இராணுவப் படையணிகளை சந்திக்கும் நோக்கில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த சிறிலங்கா இராணுவத் தளபதி யாழ் கோட்டைக்கும் விஜயம் செய்திருந்தார்.
யாழ் கோட்டைப் பகுதி இராணுவத்திற்கு உரித்தானது என்று தெரிவித்த சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, கோட்டையிலிருந்து வெளியேற வேண்டிய அவசியம் இராணுவத்திற்கு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“ யாழ் கோட்டையில் இராணுவம் மிக நீண்டகாலமாக நிலைகொண்டிருக்கின்றது. நாம் 1960 ஆம் ஆண்டு முதல் இங்கு இருக்கின்றோம். கோட்டை என்றவுடனேயே அது இராணுவத்திற்கு உரித்தானதாகவே அர்த்தப்படுகின்றது, அதற்கு வேறு யாரும் உரிமை கோர முடியாது.
இந்த இடத்தில் புதிதாக முகாமொன்றை அமைக்கவில்லை. நாம் நீண்டகாலமாக நிலைகொண்டுள்ள இந்த இடத்தில் தொடர்ந்தும் இருப்போம். அதனால் இராணுவம் புதிதாக முகாம் அமைக்கப் போவதாக நினைத்து எவரும் அச்சமடையத் தேவையில்லை. அந்தக் குற்றச்சாட்டுக்களிலும் உண்மை இல்லை. நாம் இங்கு நிரந்தரமாக இருப்போம். கோட்டையிலிருந்து வெளியேற வேண்டிய அவசியம் இராணுவத்திற்கு இல்லை. அரசாங்கத்தினதோ அல்லது வேறு ஏதாவது சிவில் அலுவலகமொன்றே இங்கு அமைக்க முன்வருவார்களானால் அவர்களையும் நாம் அன்புடன் வரவேற்கின்றோம்.
எவ்வாறாயினும் பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த யாழ் கோட்டையை இராணுவம் கையகப்படுத்துவதன் மூலம் தமிழர் பகுதிகளில் உள்ள தொல்பொருளியல் முக்கியத்தும்மிக்க இடங்களை அழிக்க தொல்பொருளியல் திணைக்களம் இராணுவத்திற்கு துணை போவதாக குற்றம்சாட்டி கடந்த யூலை மாதம் தமிழ் கட்சிகள் அனைத்தும் இணைந்து யாழ் கோட்டைக்கு முன்னால் போராட்டமொன்றையும் முன்னெடுத்திருந்தனர்.
இந்தப் போராட்டத்தை ஏற்பாடுசெய்திருந்தவர்களில் ஒருவரான வட மாகாணத்தின் முன்னாள் விவசாய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரான ஐங்கரநேசன், தமிழ் மக்களை அடிமைப்படுத்தி வைத்துக்கொள்ளும் அடையாளமாகவே யாழ் கோட்டையை இராணுவம் கையகப்படுத்த முனைவதாக குற்றம்சாட்டியிருந்தார்.
திருகோணமலை, காலி, மாத்தறை ஆகிய பகுதிகளிலும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க கோட்டைகளில் இராணுவத்தினர் முகாமிட்டுள்ளதாகத் தெரிவிக்கும் சிறிலங்கா இராணுவத் தளபதி, எனினும் அந்தப் பகுதி மக்கள் இராணுவத்திற்கு எதிர்ப்பை வெளியிடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை யாழ் கோட்டை இராணுவத்திற்கு உரித்தானது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க உரிமை கொண்டாடிவருகின்ற போதிலும், தொல்லியல் திணைக்களத்தின் பராமரிப்பிலேயே யாழ் கோட்டை இருந்து வருகின்றது.
இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் போது யுத்தம் காரணமாக யாழ் கோட்டையிலுள்ள தொல்லியல் முக்கியத்துவம் மிக்க பல சான்றுகள் அழிவடைந்துள்ளதாக தொல்லியல் நிபுணர்களும் அறிக்கையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.