இந்தியாவின் பெங்களூரில் இருந்து பீகார் தலைநகரம் பாட்னாவுக்கு இன்றுகாலை சென்ற விமானத்தில் பயணம் செய்த தம்பதியினரது 4 மாத குழந்தை மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தது.
பெங்களூரில் இருந்து பீகார் தலைநகரம் பாட்னாவுக்கு இன்று காலை தனியார் பயணிகள் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 4 மாத கைக்குழந்தையுடன் ஒரு தம்பதியினரும் பயணம் செய்தனர்.
விமானம் பெங்களூரில் இருந்து புறப்பட்டு மேல் எழுந்து சென்றதும் அந்த குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. சுவாசிக்க முடியாமல் கஷ்டப்பட்ட அந்த குழந்தை உயிருக்கு போராடியது.
இதுபற்றி பெற்றோர் விமான ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ஊழியர்களும், அதே விமானத்தில் பயணம் செய்த வைத்தியரும் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இருப்பினும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதற்குள் விமானம் நீண்ட தூரம் பயணித்து விட்டது. எனவே விமானத்தை ஐதராபத்தில் தரையிறக்க முடிவு செய்தனர். இதனையடுத்து விமானத்தை ஐதராபாத் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு அம்புலன்ஸ் வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டது.
விமானம் தரை இறங்கியதும் குழந்தையை அம்புலன்ஸ்சில் ஏற்றி வைத்தயசாலைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வைத்தியர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விமானத்தில் ஏற்பட்ட காற்றழுத்தம் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டதா? அல்லது வேறு காரணமா? என்று தெரியவில்லை என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்