பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அயனாவரம் சிறுமிக்கு நியாயம் வேண்டி, சென்னை வள்ளுவர் கோட்டத்தின் அருகே நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், சின்னத்திரை பிரபலமான நிஷா மற்றும் கணேஷ் கலந்துக்கொண்டார்கள். அப்போது நிஷா 7 மாதங்களாகப் பாலியல் வன்கொடுமை நடந்தும், அதைப் பாதிக்கப்பட்ட சிறுமி தன் அம்மாவிடம் ஏன் சொல்லவில்லை எனக் கேட்பவர்களுக்கு நான் பதில் சொல்கிறேன். எனக்கும் அதேபோன்ற துன்பம் 10 வயதில் ஆரம்பித்து 19 வயது வரை நடந்துள்ளது. நானும் என் அம்மாவிடம் இதைச் சொல்லவே இல்லை. காரணம் பயம்.
இந்த வார்த்தைகளைக் கண்ணீருடன் சொன்னபோது கூடியிருந்தவர்கள் நடுங்கிவிட்டார்கள். இன்றைய பிரபல நிஷாவின் கண்ணீரும் வார்த்தைகளும், அன்றைய சிறுமி நிஷா அனுபவித்த துன்பங்களாகவே கண் முன்பு வந்தது.
கணேஷின் ஆறுதல்!
அந்த ஆர்ப்பாட்டத்துக்குச் சென்றால் எப்போது வேண்டுமானாலும் உடைந்து அழுதுவிடுவேன் எனப் பயந்துகொண்டேதான் வந்தேன். கணேஷ்தான், உனக்கு நடந்ததை வெளியில் சொன்னால்தான் உன் மனதில் இருக்கும் பாரம் குறையும். ப்ளீஸ் சொல்லிவிடு என்றார். அவர் கொடுத்த தைரியத்தில்தான் எனக்கு நடந்ததை மீடியா மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசினேன் என்றபடி கண்ணீரைத் துடைத்துக்கொண்டு தனக்கு நிகழ்ந்ததை வெளிப்படையாகச் சொல்ல ஆரம்பித்தார்.
”சிங்கிள் மதரின் மகள் நான். ஒரு பெண் குழந்தையை உன்னால் தனியா வளர்க்க முடியாது. அவளுக்குப் பாதுகாப்பு வேண்டும். அவளை யாருக்காவது தத்துக் கொடுத்துடு எனச் சொந்தக்காரர்கள் சொன்னதை நம்பி ஓர் ஆளுக்கு என்னை தத்துக் கொடுத்தாங்க. அவரை நான் டாடின்னுதான் கூப்பிடுவேன்.
”ஹி இஸ் மை ஸ்டெப் ஃபாதர்” அவரிடம் என்னை தத்துக் கொடுக்கும்போது எனக்கு 10 வயசு. அவருக்கு 60 வயசு. நாங்க எல்லாம் ஒரே வீட்டில்தான் இருந்தோம். அம்மாவுக்கு ஐ.டியில் வேலை என்பதால் காலையில் சீக்கிரம் போயிட்டு நைட் லேட்டா வருவாங்க. இதுதான் அவனுக்கு வசதியாகப் போச்சு. ஸ்கூலுக்குப் போயிட்டு வீட்டுக்கு வருவேன். எப்போ என்ன செய்வான் என்றே தெரியாது. என் அறையில் மூலையில் உடம்பைக் குறுக்கி உட்கார்ந்திருப்பேன். பயம், பயம், உலகத்தில் இருக்கும் அத்தனை பயத்தையும் அனுபவித்த காலம் அது. அவன் வீட்டில் பெரிய லத்தி இருக்கும். அதைவைத்தே அடிப்பான்.
அம்மா ஏன் என்று கேட்டால் பாடம் சொல்லித் தர்றேன் ஒழுக்கம் கத்துக்கொடுக்கிறேன்னு அடிப்பான். கை முட்டியை மடக்கி வெச்சுகிட்டு வார்த்தைகளை முடிக்க முடியாமல் பழைய நினைவுகளில் தவித்தார் நிஷா.
அம்மாவிடம் ஏன் சொல்லவில்லை என்று அந்த அயனாவரம் சிறுமியை எல்லோரும் கேட்ட கேள்வியை, என்னைப் பார்த்து கேட்டதாகவே உணர்கிறேன். அருவெறுப்பாக இருக்குமே தவிர நடக்கும் கொடுமையை எப்படி அம்மாவிடம் சொல்வது என்று தெரியாது. ஒரு கட்டத்தில் புத்தி தெரிந்து அம்மாவிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டினேன். அதற்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா? இதெல்லாம் உன் அம்மாவுக்குத் தெரிந்துதான் நடக்கிறது’ என்று பழியைத் தூக்கி அம்மா மேல் போட்டுவிட்டான். நானும் நம்பிவிட்டேன். அவன் வக்கிரம் பிடித்து என்னிடம் பேயாட்டம் போட ஆரம்பித்தான். காலேஜ் காலம் வரை சித்திரவதை செய்தான். ஒருகட்டத்தில், மாடலிங் செய்து நானே சம்பாதிக்க ஆரம்பித்ததும், வீட்டைவிட்டு வந்துவிட்டேன். அப்படியே சின்னத்திரைக்கும் வந்துவிட்டேன். கணேஷை சந்தித்தேன்” என்றார்.
‘பிக் பாஸ்’ முதல் சீசனில் கணேஷ் வெங்கட்ராம் கலந்துகொள்ளக் கிளம்பியபோது தான் ஏன் அழுதேன் என்ற காரணத்தை நிஷா சொன்னபோது, நானும் கலங்கிவிட்டேன்.
தனிமை பயம்
”தனியாக இருந்தால் அவன் என்னைச் செய்த சித்திரவதைகள் நினைவுக்கு வந்துவிடும். 100 நாளும் கணேஷைப் பிரிந்திருந்தால், அந்தப் பயத்திலேயே செத்துவிடுவேன் என்று நினைத்தேன். அதனால்தான் அன்றைக்கு எல்லோர் முன்னிலையிலும் அப்படி அழுதேன்” என்கிற நிஷா கணவர் கணேஷ் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
”எனக்கு நடந்த எல்லாமே அவருக்குத் தெரியும். திருமணமான புதிது. மைசூர் போயிருந்தோம். ஒருநாள் இரவு தூக்கத்தில் எழுந்த ‘அய்யோ அவன் கிள்றானே அடிக்கிறானே… ஐ வான்ட் டு கில் ஹிம்’ என்று கத்தியிருக்கிறேன். காலையில் கணேஷ் என்னிடம் சொன்னபோது, எனக்கு எல்லாமே மறந்துப்போயிருந்தது. எனக்கு இப்போது 29 வயதாகிவிட்டது. ஆனாலும், இன்னமும் என்னால் அந்தக் கொடுமைகளை மறக்கமுடியவில்லை.
கரு கலைந்தது
எங்கள் திருமணத்துக்குப் பிறகு ஒருமுறை கர்ப்பம் ஆனேன். அப்போது இதேபோன்று ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்தச் செய்திகளையே தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்ததால் மன உளைச்சலில் கரு கலைந்துவிட்டது. என் நிலைமையைப் பார்த்து இப்போது என் அம்மா குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார். என்னைப் படாதபாடு படுத்திய அவன் ஹார்ட் அட்டாக்கில் இறந்தும்விட்டான். அவன் உயிரோடு இருக்கும்போது, அவனை ஓர் அடி, ஒரு திட்டு திட்டியிருந்தாலும் என் மனது அவன் மரணத்துக்குப் பிறகாவது அமைதி அடைந்திருக்கும். அந்த அயனாவரம் சிறுமி என்னுடைய காயங்களை எல்லாம் ஞாபகப்படுத்திவிட்டாள்” என்றபடி மீண்டும் கண்கலங்க ஆரம்பித்த நிஷாவைத் தேற்றும் வழியற்று போனேன்.