சென்னையில் 1 லட்சம் ரூபாய் மதிப்புடைய ஐ போனை 15 ஆயிரம் ரூபாய்க்கு கொடுப்பதாகக் கூறி துணி துவைக்கும் சோப்பை கொடுத்து மோசடி செய்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்
மயிலாப்பூரை சேர்ந்தவர் லட்சுமணராவ், லஸ் சர்ச் சாலையில் உள்ள இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின் மேலாளர். கடந்த 31-ம் தேதி வங்கியில் இருந்த லட்சுமணராவை சந்தித்து பேச்சு கொடுத்த டிப் டாப் இளைஞர்கள் இருவர் விலையுயர்ந்த செல்போன் குறைந்த விலைக்கு கிடைக்கும் என கூறியுள்ளனர்.
சுங்கத்துறை மூலம் கிடைத்த செல்போன்கள் என்பதால் ஒரு லட்சம் மதிப்புடைய ஐ – போன் 10 ஐ 15 ஆயிரத்திற்கு தருவதாக கூறியுள்ளனர்.
அவர்கள் கொண்டு வந்த பை நிறைய செல்போன் பாக்ஸ்கள் இருந்துள்ளன. முதலில் தயங்கிய வங்கி அதிகாரி அவற்றில் ஒன்றை வாங்கி சோதித்து பார்த்து புதிய செல்போனாக இருந்ததால் ஒன்றை வாங்க முடிவு செய்தார்.
சோதித்து பார்த்த செல்போனை கொடுக்காமல் புதிய செல்போன் பாக்ஸ் ஒன்றை எடுத்து கொடுத்த மோசடி நபர்கள் 15 ஆயிரம் பணத்தை வங்கி கொண்டு சென்றனர்.
சிறிது நேரத்தில் பாக்ஸை பிரித்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தார் வங்கி அதிகாரி. ஐ போன் என ஆசைப்பட்டு வாங்கி பாக்ஸில் துணி துவைக்கும் சோப்பு தான் இருந்தது.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டது குறித்து மயிலாப்பூர் போலீசாரிடம் புகார் அளித்தார் லட்சுமண ராவ், வங்கிக்கு முன்பிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவான மோசடி நபர்களின் உருவத்தை வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.