விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே நர்சிங் படிக்கும் இளம்பெண் கொன்று கிணற்றில் வீசப்பட்ட வழக்கில், பெண்ணின் காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி அருகே கச்சிராபாளையம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் இளம்பெண் அமராவதி. நர்சிங் பயிலும் இவர் அதே ஊரைச் சேர்ந்த குணசேகரன் என்பவரை 3 மாதங்களாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அவருடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட அமராவதி, 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு கடந்த சனிக்கிழமை இரவு வீட்டை விட்டு வெளியேறினார். அவரை அழைத்துச் சென்ற குணசேகரன், குமாதவச்சேரி செல்லும் சாலையில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு வைத்து மது அருந்திய குணசேகரன் தமது நண்பர்களையும் அழைத்துள்ளார். அப்போது அங்கு சென்ற கோமுகி தாசன், ரட்சகன் மற்றும் ஒரு சிறுவன் என 3 பேர், குணசேகரனுடன் சேர்ந்து மது அருந்தி விட்டு அமராவதியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர் துப்பாட்டாவால் அவரது கழுத்தை இறுக்கி, தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த அவர்கள், உடலை அருகில் இருந்த பாழடைந்த கிணற்றில் தூக்கிட்டு வீசி விட்டு சென்று விட்டனர்.
நேற்று கிணற்றில் பெண்ணின் உடல் கிடப்பதாக கச்சிராபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைக்கவே அங்கு சென்று உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையை அடுத்து, குணசேகரன், கோமுகி தாசன், ரட்சகன் ஆகியோரைக் கைது செய்தனர். சிறுவன் கூர்நோக்கு இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டான்.