போதைப்பொருட்கள் தென்னிலங்கையில் இருந்தே வடக்கிற்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று இரவு இடம்பெற்ற விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதுமாத்திரமன்றி வடக்கு இளைஞர்களுக்கு போதைப் பொருட்களை வழங்குவதில் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பிருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்தின் உதைபந்தாட்ட கிண்ண அறிமுக நிகழ்வு நேற்று நடைபெற்றதுடன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இதன்போது குறித்த விளையாட்டு கழகத்திற்காக பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர்தாங்கியையும் அவர் திரைநீக்கம் செய்து திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து குறித்த உதைபந்தாட்ட போட்டிக்கான கிண்ணம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அங்கு தொடர்ந்து உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.