பிரதான செய்திகள்:செயற்பாட்டு அரசியலை தீவிரப்படுத்தியுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வடக்கில் ஆதரவு வேட்டைக்கான வியூகத்தை வகுத்துள்ளார். இதன் அடிப்படையில் வடக்கிற்கு விஜயம் செய்யவும் தீர்மானித்துள்ளார். மேலும் ‘வியத்மக ” என்ற புத்திஜீவிகள் அமைப்பின் கிளை அலுவலகம் ஒன்றினை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கு முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இதன் அடிப்படையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாவது வாரத்தில் இந்த அலுவலகம் யாழில் திறந்து வைக்கப்பட உள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ , கெஹேலிய ரம்புக்வெல்ல , பந்துல குணவர்தன மற்றும் கனக ஹேராத் உள்ளிட்ட வியத்மக அமைப்பின் முக்கிய செயற்பாட்டளர்கள் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
வடக்கு உள்ளிட்ட, நாட்டில் வாழும் அனைத்து சிறுபான்மை மக்களின் ஆதரவுகளைப் பெற்றுக்கொள்வதற்கு பரந்தளவிலான திட்டமொன்றினை வகுப்பது குறித்து இதன் போது பேசப்பட்டுள்ளது. மாகாண சபை தேர்தலுக்கு பின்னர் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலிலும் வெற்றி பெற வேண்டுமாயின் சிறுபான்மையின மக்களின் ஆதரவு முக்கியமானதாகும். இதற்கு முதலில் சிறுபான்மை இன சமூகத்தின் புத்திஜீவிகளை இணைத்து செயற்பட வேண்டும் என இச் சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் வடக்கில் ஆதரவு வேட்டைக்கான வியூகத்தை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வகுத்துள்ளார். இந்த வியூகத்தை முன்னெடுப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிர்கட்சியின் முக்கிய செயற்பாட்டளர்களை கோத்தபாய ராஜபக்ஷ தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளார்.