வாள் வெட்டுக்குழுவில் முன்னர் இருந்து , தற்போது திருந்தி வாழ்வோரை மீண்டும் கைது செய்வதனால் அவர்கள் விரக்தி நிலைக்கு செல்லும் அபாயம் உள்ளது என சட்டத்தரணி கே. சுகாஸ் மல்லாகம் நீதிமன்றில் தெரிவித்தார்.
வாள் வெட்டு சம்பவம் தொடர்பிலான வழக்கொன்று நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ. ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன் போது சந்தேக நபர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி , குறித்த சந்தேக நபர் வாள் வெட்டுகுழுவில் அங்கம் வகித்தார் என கைது செய்யபட்டு பின்னர் விடுவிக்கப்பட்டு திருந்தி வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் மீண்டும் மானிப்பாய் பொலிசாரினால் , வாள் வெட்டுக்குழுவுடன் தொடர்புடையவர் என கைது செய்யபட்டு உள்ளார்.
தாம் செய்த தவறுகளை நினைத்து திருந்தி வாழும் போது , அவர்களை மீண்டும் சம்பந்தமில்லாத பிரச்சனைகாக கைது செய்து சிறையில் தடுத்து வைக்கும் போது அவர்கள் மனவிரக்திக்கு உள்ளாகும் நிலைமை ஏற்பட கூடிய அபாயம் உள்ளது. அது அவர்களை மீண்டும் தவறு செய்யும் நிலைக்கும் தள்ள கூடும் என மன்றில் தெரிவித்தார்.
“வாள் வெட்டுக்குழுவில் இருப்பவர்கள் தொடர்பில் பெற்றோர் அறிந்து தாமாக முன்வந்து , தமது பிள்ளைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் மாத்திரமே அத்தகையவர்களை திருத்திக்கொள்ள முடியும்.” என நீதிவான் ஏ. ஏ. ஆனந்தராஜா தெரிவித்து, குறித்த வழக்கினை எதிர்வரும் 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.