மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பேசிவிட்டு இன்று காலை திருமுருகன் காந்தி இந்தியா திரும்பினார்.
இந்த நிலையில் பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வரும் ஞாயிறு அன்று பெங்களூரில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரணத்தினால் பெங்களூர் விமான நிலையத்தில் இன்று காலை வந்து இறங்கினார். அப்போது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இது குறித்து மே 17 இயக்கம் சார்பில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் அப்பாவிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கொல்லப்பட்டது குறித்து ஐ.நாவில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளை காரணம் காட்டி திருமுருகன் காந்தி அவர்களை பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் இந்த அடக்கு முறையினை வன்மையாக கண்டிக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.