கடந்த 1959 ஆம் வருடம் இயற்றப்பட்ட பிச்சை எடுக்க தடை சட்டத்தை டில்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
கடந்த 1959 ஆம் ஆண்டு பாம்பே பிச்சைக்காரர் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. அது நாடெங்கும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பிச்சை எடுப்பதை சட்ட விரோதம் ஆக்கியது. இந்த சட்டத்தின் படி முதல் முறையாக பிச்சை எடுப்பவர்களை மன்னித்து விடுவிக்கவும் அதன் பிறகும் பிச்சை எடுப்பவர்களுக்கு மூன்று முதல் 10 வருடம் சிறை தண்டனையும் விதிக்க வழி செய்தது.
அத்துடன் இந்த சட்டத்தின் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட பிச்சைக்காரர்களையும் அவர்களை சார்ந்தோர்களையும் கைது செய்யவும் முடியும். இந்த சட்டம் ஒரு சில மாநிலங்களில் மட்டும் சற்றே மாற்றப்பட்டு அமுலுக்கு வந்தது. தலைநகரில் எந்த மாறுதலும் இன்றி அமுலில் இருந்தது. கடந்த 2017 ஆம் வருடம் அமைச்சர் மேனகா காந்தி இது குறித்து புதிய சட்டம் இயற்றி பிச்சைக்காரர்களை சார்ந்த மைனர்களுக்கு புது வாழ்வு அளிக்க வேண்டும் என வற்புறுத்தி இருந்தார்.
கடந்த 2009 மற்றும் 2010 ஆம் வருடம் இந்த சட்டத்தை எதிர்த்து இரு பொது நல வழக்குகள் இரு சமூக ஆர்வலர்களால் டில்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. வழக்கு விசாரணையில் முதலில் மத்திய அரசு சட்டத்துக்கு ஆதரவாக வாதம் செய்தது. ஆனால் ஆம் ஆத்மியின் டில்லி அரசு இந்த சட்டத்தில் மாறுதல் செய்ய உள்ளதாக நீதிமன்றத்தில் அறிவித்தது.
நேற்று இந்த வழக்கில் நீதிபதிகள் கீதா மிட்டல் மற்றும் ஹரிசங்கரின் அமர்வு தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில் இந்த சட்டத்தை டில்லி உயர்நீதிமன்ற அமர்வு ரத்து செய்தது. இந்த தீர்ப்பை பல சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.