கருணாநிதி, தயாளு அம்மாளுக்கு 1948 செப்டெம்பர் 15-ஆம் தேதி திருவாரூரில் திருமணம் இடம்பெற்றது. அவர்களது திருமணத்தன்று சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடைபெற்றது.
விழாவுக்கு வந்தவர்களை, திருமண நாளன்று கருணாநிதி, பந்தல் முகப்பில் நின்றுகொண்டு வரவேற்றுக் கொண்டிருந்தார். அச்சமயம், ஹிந்தியை எதிர்த்து கோஷம் போட்டுக்கொண்டு சிலர் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர்.
மேலும், அவர்கள் அப்பகுதியில் மறியலில் ஈடுபடவும் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், ‘ஹிந்தி ஒழிக’ என்று கோஷம் எழுப்பியவாறு சென்று கொண்டிருந்தவர்களை கண்ட கருணாநிதி திருமணத்தையும் மறந்துவிட்டு அவர்களுடன் சேர்ந்து கோஷம் எழுப்பி கொண்டு சென்று விட்டார். இந்நிலையில், மாப்பிள்ளையை அனைவரும் தேடியுள்ளனர்.
அவர்களில் சிலர் கருணாநிதியை தேடி அப்பகுதி முழுவதும் அலைந்து திரிந்துள்ளனர். அப்போது, அங்கிருந்த பள்ளி எதிரில் சிலர் ஹிந்தியை எதிர்த்து கோஷம் போட்டுக் கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.
கோஷமிட்டவர்களில், கருணாநிதியை கண்டுள்ளதுடன், கருணாநிதியிடம் சென்று முகூர்த்த நேரம் நெருங்குவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும், அந்த மறியல் போராட்டம் முடிந்த பின்பே மணமேடைக்கு தான் வருவேன் என்று கருணாநிதி கூறியுள்ளார். அதன்படி, மறியல் முடிந்த பிறகே கருணாநிதி மணமேடைக்கு சென்று, தயாளு அம்மாளுக்கு தாலி கட்டியுள்ளார்.