கனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும் என்ற கருத்துடன் புகைப்படம் ஒன்றை சவுதி அரேபியா வெளியிட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடா அரசு சவுதி அரேபியாவின் உள் விவகாரங்களில் தேவையின்றி தலையிடுவதாக கூறி, சவுதிக்கான கனடிய தூதரை அந்த நாடு அடுத்த 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் எனக் கூறி எச்சரித்தது. அது மட்டுமின்றி கனடாவில் சவுதி அரேபியாவுக்கான தூதரையும் திரும்ப பெறுவதாக அறிவித்தது. இந்த நிலையில் சவுதி அரசுக்கு தொடர்புடைய டுவிட்டர் பக்கம் ஒன்றில் வெளியான புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த புகைப்படத்தை அடுத்த சில மணி நேரத்தில் சவுதி அரேபியா அரசு நீக்கியுள்ளது.
அந்த புகைப்படத்தில் கனடாவின் டொராண்டோவில் அமைந்துள்ள சிஎன் டவர் நோக்கி விமானம் ஒன்று விரைவதாக காட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அமைந்துள்ள இரட்டை கோபுரத் தாக்குதல் போன்று கனடாவிலும் நடைபெறும் என்பதை சுட்டிக்காட்டுவதாக அந்த புகைப்படம் அமைந்துள்ளது. குறித்த புகைப்படத்தில், தேவையின்றி மூக்கை நுழைக்காதே என்ற வாக்கியமும் இடம்பெற்றிருந்தது.
1814 அடி உயரம் கொண்ட சிஎன் டவர் கனடாவின் அடையாளங்களில் ஒன்றாகும். 500-கும் மேற்பட்டவர்கள் இந்த கோபுரத்தில் பணியாற்றி வருகின்றனர். அது மட்டுமின்றி ஆண்டுக்கு சுமார் 15 கோடி மில்லியன் சுற்றுலா பயணிகளையும் அந்த கோபுரம் ஈர்த்து வருகிறது. இந்த நிலையில் குறித்த புகைப்படம் தொடர்பில் பல்வேறு கண்டனங்கள் எழுந்துள்ளதை அடுத்து தொடர்புடைய படத்தை நீக்கியுள்ளதுடன் மன்னிப்பும் கோரியுள்ளது. இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட 19 பேரில் 15 பேர் சவுதி அரேபியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.