‘நீங்களும் வெல்லாம் ஒரு கோடி’ பாணியிலான கேம் ஷோவில் சீனப்பெருஞ்சுவர் எந்த நாட்டில் உள்ளது? என்ற கேள்விக்கு மற்றவர்களின் உதவியை நாடிய பொருளாதார பட்டதாரி பெண் இணையத்தில் வைரலாகியுள்ளார்.
இந்தியாவின் அனைத்து பகுதியிலும் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ பாணியிலான நிகழ்ச்சிகள் பிரபலமானவை. தமிழில் இந்த நிகழ்ச்சியை சூர்யா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் தொகுத்து வழங்கியுள்ளனர். இந்தியில் அமிதாப் பச்சன் மற்றும் மற்ற மாநிலங்களில் சினிமா பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்துள்ளனர்.
உலகம் முழுவதும் இதே பானியிலான போட்டிகள் டி.வி.களில் நடந்து வருகிறது. துருக்கி நாட்டைச் சேர்ந்த சேனல் ஒன்றும் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த போட்டியில் கலந்து கொண்ட சு அய்ஹான் என்ற பெண் தான் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளார்.
இந்த நிகழ்ச்சி விதிப்படி போட்டியாளருக்கு பதில் தெரியவில்லை என்றால் அவர் மூன்று முறை உதவியை நாடலாம். போன் மூலம் ஒருவரை தொடர்பு கொள்வது, சுற்றியுள்ள பார்வையாளர்கள் உதவியை கேட்பது, நான்கு பதில்களில் தவறான இரண்டை நீக்க கோருவது ஆகிய மூன்று உதவிகள் போட்டியாளருக்கு வழங்கப்படும்.
இந்நிலையில், சு அய்ஹானுக்கு ‘சீனப்பெருஞ்சுவர் எந்த நாட்டில் உள்ளது?’ என்ற மிக எளிதான கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு சீனா, இந்தியா, ஜப்பான், தென்கொரியா என நான்கு பதிகளும் கொடுக்கப்பட்டது.
இந்த கேள்விக்கு திருதிருவென முழித்த அவர், ‘எனக்கு பதில் கொஞ்சம் தெரியும். ஆனால், சந்தேகம் இருப்பதால் பார்வையாளர்களின் உதவியை கேட்கிறேன்’ என கூறி அதிர வைத்துள்ளார். கேள்வியிலேயே பதில் இருப்பதை அறியாமல் அவர் மற்றவர்களின் உதவியை நாடியுள்ளார்.
சுற்றியிருந்த பார்வையாளர்கள் 51 சதவிகிதம் பேர் சீனாவை பதிலாக தேர்வு செய்தனர். மீதமுள்ளவர்களில் பலர் இந்தியா எனவும் சிலர் ஜப்பான் எனவும் பதில்களை தேர்வு செய்தனர். இதனால், மேலும் குழப்பமடைந்த அய்ஹான், இரண்டாவது லைப்லைனையும் தேர்வு செய்தார்.
தனது நண்பரை போன் மூலம் தொடர்பு கொண்டு சீனா என்ற பதிலை அய்ஹான் தேர்வு செய்தார். கேள்வியிலேயே பதிலை கொண்டுள்ள மிகவும் எளிதான கேள்விக்கே பிறரின் உதவியை கேட்ட அய்ஹான் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் ஆவார்.
இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. எளிதான கேள்விக்கு ஒரு வழியாக பதில் கூறிய அய்ஹான் அடுத்த கேள்விக்கு தவறாக பதில் கூறி போட்டியை விட்டு வெளியேறினார்.