மகனின் கைத்தொலைபேசியில் காணப்பட்ட ஆபாச காணொளிகளைப் பார்த்த தாய் அதிர்ச்சியில் மயக்கமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
பொலன்னறுவையிலுள்ள பாடசாலை ஒன்றின் உயர்தர வகுப்பு மாணவரொருவரிடமிருந்து பாடசாலை ஒழுக்காற்று குழுவினர் கைத்தொலைபேசியை கைப்பற்றி சோதனையிட்டபோது, அதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட ஆபாச காணொளிகள் சேமிக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, பாடசாலை ஒழுக்காற்று குழுவினர், மேற்படி மாணவனின் தாயாரை பாடசாலைக்கு வரவழைத்து அவரது மகனின் செயற்பாடுகள் குறித்து தெரிவித்துள்ளனர்.
அதன்போது, குறித்த மாணவனின் தாயார், தனது மகன் மிகவும் கீழ்ப்படிவானவர் எனவும் அவர் அவ்வாறான காரியங்களை செய்திருக்கவாய்ப்பில்லை எனவும் கூறி, மகன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
அதன்போது, குறித்த மாணவனிடமிருந்து கைப்பற்றிய கைத்தொலைபேசியை பாடசாலை ஒழுக்காற்று குழுவினர், அவரது தாயிடம் கொடுத்துள்ள நிலையில், அவர் அதில் காணப்பட்ட ஆபாசப் படக் காணொளிகளைக் கண்டு அல்லது தனது மகனின் நடத்தை குறித்த அதிர்ச்சியில் மயக்கமடைந்துள்ளார்.
இதனையடுத்து, ஆசிரியர்கள் அவருக்கு முதலுதவி செய்தும் பயனளிக்காமையினால் அவரை பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், வைத்தியர்களின் ஊடாக இவ்விடயம் தொடர்பில் வைத்தியசாலை பொலிஸ் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், மாணவனின் தாய் மயக்கத்திலிருந்து தெளிந்ததையடுத்து பொலிஸார் அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தபோது, தனது கைத்தொலைபேசியிலிருந்தே மகன் குறித்த காணொளிகளை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தாயையும், மகனையும் பொலிஸ் உயரதிகாரியொருவர் முன்னிலையில் வைத்தியசாலை பொலிஸார் ஆஜர்படுத்தியதையடுத்து அவர்கள் இருவரும் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட அதேவேளை, ஆபாசக் காணொளி அடங்கிய மெமரி கார்டையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.