திமுக தலைவரும், 5 முறை தமிழக முதல்வராக இருந்த கலைஞர் மறைவையொட்டி வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த விநாயகபுரம் கூட்டுரோட்டில் ஏற்கனவே இருந்த கொடிகம்பத்தின் பீடத்தின் மேலிருந்த கொடி கம்பம் அகற்றப்பட்டு 3 அடி உயரமுள்ள கலைஞரின் மார்பளவு சிலை ஆகஸ்ட் 8-ந்தேதி காலை வைக்கப்பட்டுயிருந்தது.
குடியாத்தம் மேற்கு ஒன்றியத்தை சேர்ந்தவரும், மத்திய மாவட்ட பிரதிநிதியுமான கிருஷ்ணமூர்த்தி என்பவர் அந்த சிலையை வைத்திருந்தார்.
இந்த சிலைக்கு அப்பகுதி திமுகவினர் மாலை அணிவித்து இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் ஆகஸ்ட் 8-ந்தேதி இரவு சிலை வைக்கப்பட்ட பகுதிக்கு வந்த வருவாய்த்துறையினர் மற்றும் குடியாத்தம் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சிலை வைத்த கிருஷ்ணமூர்த்தியிடம், அரசாங்க அனுமதியில்லாமல் சிலை வைத்தது தவறு, சிலையை எடுக்கவில்லையென்றால், நாங்கள் சிலையை அப்புறப்படுத்துவோம் என பேச்சுவார்த்தை நடத்தி சிலையை அகற்றவைத்தனர்.
கலைஞர் மறைவுக்கு பின் முதன் முறையாக வைக்கப்பட்ட சிலை, வைத்த ஒரே நாளில் அரசு அனுமதியில்லை என அகற்றப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.