உலக சந்தை விலையில் ஏற்படும் மாற்றத்திற்கு அமைய இலங்கையின் எரிபொருள் விலையை நிர்ணயம் செய்யும் குழுவின் கூட்டம் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.
இதன்போது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்தல் அல்லது குறைத்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளது.
எரிபொருள் விலைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவில், கனியவள அபிவிருத்தி அமைச்சின் செயலாளரின் பிரதிநிதி, திரைசேரியின் பிரதி செயலாளர் மற்றும் திரைசேரியின் பணிப்பாளர்கள் இருவர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உலக சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் நேற்றைய தினம் 72.30 அமெரிக்க டொலர்களாக பதிவானது.
இதேவேளை, சிங்கப்பூர் சந்தையில் பெற்றோல் பீப்பாய் ஒன்றின் விலை 83.3 அமெரிக்க டொலர்களாகவும், டீசல் பீப்பாய் ஒன்றின் விலை 86.17 அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியிருந்தன.
இதற்கமைய, 92 ஒக்டேன் ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவினாலும், 95 ஒக்டேன் ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டது.
டீசல் லீற்றர் ஒன்றின் விலை 9 ரூபாவினாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டது.
உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடிய நிலைமைகள் உள்ளமையினால், நாட்டில் மீண்டும் எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.