தீர்வு கிடைக்காததன் காரணமாக இன்றைய தினமும் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக தொடருந்து தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
வேதன பிரச்சினையை முன்னிறுத்தி நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணி முதல் தொடருந்து தொழிற்சங்கம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்தது.
இந்த பணிப்புறக்கணிப்பில் தொடருந்து இயந்திர சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், நிலைய அதிபர்கள், கண்காணிப்பாளர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
இதுதவிர இந்த போராட்டத்திற்கு தொடருந்து கண்காணிப்பு முகாமைத்துவக்கு உட்பட்ட 5 தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்கியுள்ளன.
எவ்வாறாயினும், பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவளிக்காத சேவையாளர்களை ஈடுபடுத்தி கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து கண்டி, சிலாபம், ரம்புக்கனை, காலி, அவிசாவளை மற்றும் மஹவ ஆகிய பகுதிகளுக்கு 8 தொடருந்து சேவைகள் இடம்பெற்றன.
எவ்வாறாயினும், அதிகாரிகள் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு பதிலாக பல்வேறுப்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதன் காரணமாக தற்போது போக்குவரத்தில் ஈடுபடும் 8 தொடருந்து போக்குவரத்தையும் நிறுத்த நேரிடும் என இயந்திர சாரதிகள் சங்க செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.