மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று (09/08/2015) போதனா வைத்தியசாலைக்கு கிளினிக்(பரிசோதனை) சென்ற கர்ப்பிணித்தாய் ஒருவரிடம் அங்கு பயிற்சி வைத்தியர் போல் வேடமிட்டு வந்த பெண் ஒருவர் அவரிடமிருந்த தாலிக்கொடி, மாலை, காப்பு உட்பட 19 பவுண் தங்கநகையை அபகரித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது…
மட்டக்களப்பு நாவற்குடாவைச்சேர்ந்த கர்ப்பிணித்தாய் தனது மாதாந்த பரிசோதனைக்காக வியாழக்கிழமை மட்டு போதனா வைத்தியசாலைக்கு தனது கணவருடன் சென்றுள்ளார்.
குறித்த கர்ப்பிணிப்பிணியின் கணவர். மனைவியை வைத்தியசாலையின் வெளியே இறக்கிவிட்டு அவருக்காக மருந்து எடுக்கச்சென்றுள்ளார். இந்நிலையில் உள்ளக பயிற்சி வைத்தியர் போல் வேடமிட்ட பெண்ணொருவர். குறித்த கர்ப்பிணியிடம் பேச்சுக்கொடுத்துள்ளதுடன். இன்று உங்களுக்கு ஸ்கேன் எடுக்க இருப்பதாகக்கூறி அவர் கையில் வைத்திருந்த 4ஆம் இலக்கம் பொறிக்கப்பட்ட துண்டு ஒன்றை கொடுத்துள்ளார். பின்னர் அவரை கதிரை ஒன்றில் அமரச்செய்துள்ளார்.
கர்ப்பிணியை பரிசோதிப்பது போல் பரிசோதித்த பெண் தற்போது ஸ்கேன் எடுக்கவிருப்பதால் கழுத்தில், கையில் கிடக்கும் நகைகளை கழற்றுமாறு கூறி ஸ்கேன் எடுத்துவரும் வரை தான் வைத்திருப்பதாக கூறி தனது பையில் வைத்துள்ளார். அதன் பின்பு குறித்த கர்ப்பிணியை வைத்தியசாலையிலுள்ள அறை ஒன்றைக்காட்டி அதற்குள் செல்லுமாறு தான் பின்னால் வருவதாகவும் கூறியுள்ளார். கர்ப்பிணிபெண் அவர் காட்டிய அறைக்குள் நுழைந்தவுடன். வைத்தியர்போல் வேடமிட்டிருந்த போலி வைத்தியப்பெண் நகைகளுடன் வெளியே ஓட்டமெடுத்துள்ளார்.
அதன் பின்பே குறித்த கர்ப்பிணிப்பெண் தான் ஏமாற்றப்பட்டுள்ளதையும், தனது நகைகள் பறிபோயுள்ளதையும் உணர்ந்து அழுது புலம்பியுள்ளார். வைத்தியசாலைக்குள்ளே பயிற்சி வைத்தியர்போல் வேடமிட்டு நோயாளியிடம் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தற்போது மட்டக்களப்பு , அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இவ்வாறான நூதனதிருட்டுக்கள் இடம்பெற்றுவருவதால் பொதுமக்களை விழிப்புடன் செயற்படுமாறு பாதிக்கப்பட்டோர் கோரிக்கைவிடுக்கின்றனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வைத்திய பரிசோதனைக்காக செல்லும் எந்த பெண்களும் தங்க நகை அணிந்து செல்வதை தவிர்கவும்.அது போதனா வைத்தியசாலை என்பதால் வைத்திய பீட மாணவர்களை போல் வேடமிட்டு தங்க நகைகளை திருடப்படலாம்.