மட்டக்களப்பு தன்னாமுனை காமாச்சிபுரம் வீட்டு திட்ட கிராமத்தில் வெட்டப்பட்டிருந்த குளத்தில் விழுந்த எட்டு வயது சிறுமி பரிதாபமாக பலியாகியான சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 13ஆம் திகதி தங்களுக்காக கட்டப்பட்ட புதிய வீட்டில் குடியேறும் கனவுடன் கல்லடியில் இருந்து வந்த அனுரஞ்சித் அனுசேரா அசேல் என்ற எட்டு வயது சிறுமியே நேற்று தாமரை தடாகத்தில் மூழ்கி உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சிறுமியின் மரணத்திற்கு காரணம் மண்ணை விற்கும் கொள்ளையர்களின் பணத்தாசையால் காமாட்சி கிராமத்தில் இரவோடு இரவாக வெட்டப்பட்ட குளமே என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த குளம் அமைப்பதற்கு மண் அகழ்வு பணிகளுக்கு பொறுப்பாக இருந்த முன்னாள் கருணா குழு உறுப்பினரும் தற்போதைய மண் அகழ்வு பணியில் ஈடுபடும் நபரான ஞானப்பிரகாசம் யூலியன் ஜொய் பிரகாஷ் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவத்தில் பலியான சிறுமி மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியில் தரம் 3 கல்வி கற்கும் மாணவியாகும்.
மட்டக்களப்பு தன்னாமுனை காமாச்சிபுரம் வீட்டு திட்டத்தை திறந்து வைப்பதற்காக எதிர்வரும் 13.08.2018 அன்று அமைச்சர் சஜித் பிரேமதாச வருகை தரவுள்ள நிலையில் குறித்த வீட்டுத்திட்ட கிராமத்தின் நடுவில் சிறிய குளம் அமைக்கும் பணியை ஆரம்பித்துள்ளனர்.
சவுக்கடி மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் பெயரில் சுமார் 10 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட இருக்கும் இந்த குளத்திற்கான ஒப்பந்த வேலையினை ஞானப்பிரகாசம் யூலியன் ஜொய் பிரகஷ் என்பவரிடம் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரின் வருகைக்காக அவசர அவசரமாக குளம் தோண்டப்பட்ட நிலையில் அங்கு விற்பனைக்கு உகந்த மண் இருந்தமையினால் இரவோடு இரவாக இயந்திரங்களை கொண்டு அங்குள்ள நிலத்தை அளவுக்கு அதிகமான ஆழத்திற்கு தோண்டி அங்கிருந்த மண்ணை இரவோடு இரவாக ஏற்றியுள்ளனர்.
அடுதநாள் காலை தாங்கள் குடியேற இருக்கும் வீட்டை துப்பரவு செய்ய தங்களது பெற்றோருடன் வந்த சிறுமி தோண்டப்பட்டிருந்த குளத்தின் அருகில் விளையாடிய போது, தவறுதலாக குளத்திற்குள் விழுந்துள்ளது.
இதேநேரம் குழந்தையுடன் விளையாடிய சிறுவர்கள் மூவரில் ஒருவர், குளத்திற்குள் விழுந்த சிறுமியை தூக்கி எடுத்துள்ளார். இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பெற்றோர் சிறுமியை மோட்டார் சைக்கிளில் வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போதும் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.