மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் அலுவலகம் திறந்து வைக்கப்படடுள்ளது.
மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவை விடுத்து சுயமாக இயங்கும் வகையில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒப்படைக்கப்பட்ட பலருக்கு என்ன நடந்தது என்று இன்னும் தெரியாமல் மனைவி கணவனையும் பெற்றோர் பிள்ளைகளையும் தேடியவாறு அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும் அரசாங்கமானது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு எந்த ஒரு தீர்வையும் தராமலும் அதற்கான பொறுப்பு கூறாமலும் காலத்தை இழுத்தடித்து எமது போராட்டத்தை மறக்கச் செய்யும் செயற்பாடுகளில் முனைப்புக் காட்டி வருகிறது.
அரசின் கபடத்தனத்தை உலகிற்கு காட்டுவதற்காகவும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீதியை விடாப்பிடியாக பெற்றுக்கொள்வதற்காகவும் மக்கள் 500 நாட்களை கடந்த தொடர் போராட்டங்களை முன்னெடுத்த நிலையில் தமது போராட்ட வடிவத்தை மாற்றியுள்ளனர்.
இதற்கமைய முல்லைத்தீவு, கிளிநொச்சி, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் அலுவலகம் திறந்து வைக்கப்பட்ட நிலையில் இன்று மன்னாரிலும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் சாவற்காட்டுப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் அலுவலகம் மாவட்ட தலைவி உதய சந்திராவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பங்குத்தந்தை ஜெயபாலன் அடிகளார் ,வட மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் ,வடமாகான சபை உறுப்பினர் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரன் டேவிடசன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம்,மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
எனினும் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவுடன் தொடர்புபடாத இந்த அலுவகத்தின் திறப்பு விழாவில் மன்னார் மாவட்ட ஆயர் இல்லம் கலந்து கொள்ளவில்லையென்பது சுட்டிக்காட்டத்தக்கது.